ஒட்டுக்குளத்தில் பறவைகள் சீசன் பாதுகாக்க தேவை நடவடிக்கை
உடுமலை: வலசை வரும் பறவைகளை பாதுகாக்க, ஒட்டுக்குளத்தில் தேவையான வசதிகளை மேற்கொள்ள, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்துக்குட்பட்ட, பாசன குளங்கள், தளியில் இருந்து அடுத்தடுத்து, அடுக்குத்தொடராய் அமைந்துள்ளன.திருமூர்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வாயிலாக, அரசாணை அடிப்படையில், இக்குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. குறிப்பிட்ட மாதங்கள் தண்ணீர் நிரம்பி இருக்கும். இக்குளங்களுக்கு, ஆண்டுதோறும் பல அரிய வகை பறவையினங்கள் வலசை வந்து செல்வது வழக்கமாக உள்ளது.உடுமலை நகரின் அருகிலுள்ள, ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்தில், தற்போதைய சீசனில், பல்வேறு பறவையினங்கள் வலசை வந்துள்ளன.இந்த பறவையினங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக, பறவைகளின் நலனுக்காக, குளத்தையொட்டி, குறுங்காடு அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.ஏழு குள பாசனத்திட்டத்துக்குட்பட்ட, பெரியகுளம், ஒட்டுக்குளம் உட்பட அனைத்து குளங்களிலும், ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன.நீர் தேக்க பரப்பிலும், நீர் வரத்து பகுதியிலும், பல ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை மீட்க, பொதுப்பணித்துறை சார்பில், அளவீட்டு பணிகள் செய்யப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன.ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் இழுபறியாக உள்ளது. இவ்வாறு, அனைத்து குளங்களிலும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில், குறுங்காடுகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.'மியாவாக்கி' எனும் அடர் நடவு முறையில், பறவைகளுக்கு தேவையான மரங்களை நட்டு பராமரிக்கலாம். இதனால், ஆண்டுதோறும் வலசை வரும் பறவையினங்கள் பயன்பெறுவதுடன், கரைகளிலும் மண் அரிப்பு தடுக்கப்படும்.மழையை ஈர்க்கும், குறுங்காடுகளை, உடுமலை பகுதியில், அதிகரிப்பது பல்வேறு பலன்களை அளிக்கும். எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். மேலும், குளத்துக்கரையில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.