உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் வரி விதிப்பு நீக்கப்பட வேண்டும்: மா.கம்யூ.,

கூடுதல் வரி விதிப்பு நீக்கப்பட வேண்டும்: மா.கம்யூ.,

திருப்பூர் ''அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிவிதிப்பை நீக்க நடவடிக்கை தேவை'' என்று மா.கம்யூ., தெரிவித்துள்ளது. மா. கம்யூ., திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் மூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது; நம்மை மிரட்டிப் பணிய வைக்க முயலும் டிரம்ப்பின் இந்நடவடிக்கைக்கு நாம் அடிபணியக் கூடாது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் ஜவுளி மற்றும் இதர உற்பத்தித் துறை கடும் பாதிப்பைச் சந்திக்கும். திருப்பூரின் பின்னலாடை ஜவுளி ஏற்றுமதித் தொழில் வர்த்தகம் கடும் பின்னடைவை சந்திக்கும். நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் ஏறத்தாழ 40 சதவீதம் பங்களிக்கிறது. இதில், 50 சதவீதம் முதன்மையான இறக்குமதி நாடாக அமெரிக்கா உள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பால், திருப்பூர் ஏற்றுமதி பாதிக்கப்படும்; ஆர்டர் குறைந்து, பின்னலாடை உற்பத்தியும் சரியும். உடனடியாக தலையிட்டு அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !