மங்கலம் சாலையில் சாகச பயணம்; மக்களுக்கு தீரவில்லை துயரம்
திருப்பூர் : திருப்பூரில் உள்ள பிரதான சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மங்கலம் சாலை மட்டும், குறுகியே காணப்படுகிறது; இந்த சாலையும், பல இடங்களில் துண்டாடப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி எல்லையில் உள்ள, அனைத்து மாநில நெடுஞ்சாலை ரோடுகளும், இருவழிப்பாதையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலமான ரோடு வசதி செய்யப்பட்டுள்ளது; மையத்தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.ஏனிந்த நிலை?
இருப்பினும், மங்கலம் ரோடு மட்டும், 15 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே தொடர்கிறது. மங்கலம் ரோட்டை விரிவாக்கம் செய்ய, நிலம் எடுக்க வேண்டியுள்ளது; அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.குறுகிய சாலை
மாநகராட்சி அலுவலகம் துவங்கி, பாரப்பாளையம் வரையில், ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இருவழிப்பாதையாக இருப்பதால், பஸ் ஸ்டாண்ட் துவங்கி, பாரப்பாளையம் வரை, மங்கலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.மாநகராட்சியின், 4வது குடிநீர் திட்ட பணிகளுக்காக, மங்கலம் ரோடு பகுதியில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டன; பின், பகிர்மான குழாய் பதிக்கும் பணியும் நடந்தது. பெயருக்கு 'பேட்ஜ்ஒர்க்'
ஏற்கனவே, குண்டும், குழியுமாக இருந்த ரோடு மாநகராட்சி பணிகளுக்காக பல இடங்களில் துண்டாடப்பட்டது. முக்கியமான ரோட்டில், குழி தோண்டிய இடத்தில், சரியாக 'பேட்ஜ் ஒர்க்' செய்யவே இல்லை. சில இடங்களில் மட்டும், கான்கிரீட் கலவையை பரப்பிச்சென்றனர்.பல இடங்களில் ரோட்டின் மையப்பகுதிகளில், சிறிய குளங்கள் போல் குழிகள் ஏற்பட்டுள்ளன. சிறிய மழை பெய்து விட்டாலே, 'டூ வீலரில்' சென்றுவர முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் இதைச் சீராக்க வேண்டும்.
ஏன் புறக்கணிப்பு?
பொதுமக்கள் கூறியதாவது: மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் போன்ற, வி.ஐ.பி.,கள் இப்பகுதியில் இல்லாததால், மாநகராட்சியும் மங்கலம் ரோட்டை கண்டுகொள்வதில்லை.'டூ வீலரில்' சென்று வரும் போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, தாடிக்கார முக்கு, பட்டத்தரசியம்மன் கோவில் பகுதிகள், கருவம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதிகள், பழக்குடோன் ரோடு பகுதிகள் அதிக அளவு சேதமாகியுள்ளன. இனி மழை காலம் துவங்கிவிட்டால், மங்கலம் ரோடு வழியாக சென்று வருவோருக்கு விபத்து அபாயம் உள்ளது. போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து, ஜம்மனை பாலம் துவங்கி, பாரப்பாளையம் வரை, தார்ரோட்டை சீரமைக்க வேண்டும்.