மானிய யூரியாவை தவறாக பயன்படுத்தினால்... வேளாண் அதிகாரி எச்சரிக்கை
திருப்பூர்: மானிய விலை யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் நட வடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கான உரங்கள், தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. யூரியா - 2,845 டன், டி.ஏ.பி., 974 - பொட்டாஷ், 1,895, காம்ப்ளக்ஸ், 3,754 டன் இருப்பு உள்ளது.தொழிற்சாலை யூரியா உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் ஆண்டு அறிக்கையை, ஏப். 15ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.உரிமம் பெறாமல் மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உரக்கட்டுப்பாடு சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும். மேலும், விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை யூரியாவை, தவறாக தொழிற்சாலைக்கு பயன்படுத்தும் நபர்கள் மீது, அத்தியாவசிய பொருட்கள் சட்டப்படி, மூன்று மாதம் முதல், 7 மாதங்கள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை யூரியா உரிமம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே யூரியா வாங்க வேண்டும்.மானிய உரங்களை வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதோ, கொள் முதல் செய்வதோ கூடாது. அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதித்த இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். உரிமத்தில் அனுமதியின்றி, கலப்பு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.விவசாயம் அல்லாத வேறு தேவைக்காக மானிய உரங்களை விற்பனை செய்தாலோ உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபட்டாலோ, அத்தியாவசிய பண்டங்கள் சட்டம், உர கட்டுப்பாடு சட்டம், உர நகர்வு கட்டுப்பாடு உத்தரவுகள்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.