விதிமீறல் பிளக்ஸ் அதிகரிப்பு; கண்டு கொள்ளாத அதிகாரிகள்
உடுமலை ; பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அரசு தடை உள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவும் கடுமையாக இருந்தும், அரசியல் கட்சியினர் மற்றும் வணிக நிறுவனங்கள் சார்பில், அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை.உடுமலை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்பு என நகரின் பெரும்பாலான ரோடுகள் மற்றும் தாலுகா அலுவலகம், நுாலகம் என அரசு அலுவலகங்கள் முன்பும், விதி முறை மீறி, அரசியல் கட்சியினர் மற்றும் வணிக நிறுவனங்கள் சார்பில், நுாற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.பிரதான ரோடு சந்திப்புகள், வளைவுகள், திருப்பங்களில் விதி மீறி வைக்கப்பட்டுள்ள, இந்த பிளக்ஸ் பேனர்களால், வாகன விபத்துக்கள், கவனச்சிதறல்கள் அதிகரித்து வருகிறது.எனவே, உடுமலை நகர பகுதிகளில், விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை பாரபட்சமின்றி உடனடியாக அகற்றவும், விதிமுறை மீறி பிளக்ஸ் வைத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.