உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் நிழல் தரும் சோலை... களம் இறங்கி இளைஞர்கள் சேவை!

சாலையில் நிழல் தரும் சோலை... களம் இறங்கி இளைஞர்கள் சேவை!

''வானிலை மாற்றம் என்பது, வாழ்க்கை சூழலையே புரட்டி போடுகிறது. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வெப்பநிலை, மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை தவிர்க்க, வசதி, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரம் வளர்த்து, பசுமையை பரப்பை அதிகரிக்க வேண்டும்'' என்கின்றனர், விஞ்ஞானிகள்.பணம் கொழிக்கும் திருப்பூரில், தினம், தினம் நீர், நிலம், காற்று மாசு என்பது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆண்டு தோறும், ஆடை உற்பத்தி உள்ளிட்ட தொழில் வளர்ச்சி இரு மடங்கு அதிகரிக்கும் என, அத்தொழில் சார்ந்தோர் கூறிவரும் நிலையில், அதற்கேற்ப நீர், நிலம், காற்று மாசும் அதிகரிக்கும் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.இதை நன்குணர்ந்த தன்னார்வ அமைப்பினர் பலர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் மரம் வளர்ப்பை, ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றனர். வனத்துறை உள்ளிட்ட அரசு துறையினரும் மரம் வளர்ப்பில் முனைப்புக் காட்டி வருகின்றன.'ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மரக்கன்று நட்டுள்ளோம்' என கணக்கு சொல்லப்படும் நிலையில், இந்த பசுமை பரப்பு எந்தளவு சுற்றுச்சூழல் மாசுபாடை எந்தளவு கட்டுப்படுத்தியிருக்கிறது என்பதற்கான ஆய்வுகள் அவசியம்.இந்நிலையில், நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் மரக்கன்று நடும் திட்டத்தை முன்னெடுத்த களம் அறக்கட்டளையினர், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அவிநாசி ஆட்டையம்பாளையம் - மேட்டுப்பாளையம் ரோட்டில், கருவலுார் பகுதியில் செயல்படுத்தியுள்ளனர். நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு, சாலையின் நடுவில் மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குழி தோண்டி வரிசையாக, 20 மகாகனி மரக்கன்றுகளை நட்டுள்ளனர், களம் அறக்கட்டளையினர். கருவலுார் ரோட்டரி சங்கம் மற்றும் அவிநாசி வனம் அமைப்பினரும் இத்திட்டத்தில் கரம் கோர்த்துள்ளனர்.'களம்' அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அனுமதி மற்றும் ஒத்துழைப்பால் நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் மரக்கன்று நட அனுமதி கிடைத்திருக்கிறது. முதல் முயற்சியாக, அவிநாசி - சேவூர் சாலை, சிந்தாமணி பகுதியில், 16 மரக்கன்றுகளை நட்டோம்; அனைத்து மரக்கன்றுகளும், செழித்து வளர துவங்கியுள்ளன. தொடர்ச்சியாக, கருவலுார் சாலையில் மரக்கன்று நட்டுள்ளோம்; நெடுஞ்சாலைத்துறை, கருவலுார் ஊராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியது. நட்டு வைத்துள்ள மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்கவும் உள்ளோம். விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவில் மரக்கன்று நட்டு வளர்க்கும் போது, அந்த மரங்கள் பரப்பும் நிழல், சாலையின் இருபுறமும் சூழும். இத்திட்டத்தை அரசே முன்னெடுத்து, கொள்கை திட்டமாக அறிவித்து, செயல்படுத்தும் பட்சத்தில், மிக விரைவாக சாலையெங்கும் நிழல் தரும் சோலை உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை