உள்ளூர் செய்திகள்

குப்பையில் அனல்

திருப்பூர் மாநகரில், தினமும் 800 டன் குப்பைகள் சேர்கின்றன. இவை, காலியாக உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு நிரம்பியது. மாநகரில் துவங்கி, மாவட்டத்தின் எல்லை வரை, குப்பை கொட்டுவதற்காக பாறைக்குழிகளை, மாநகராட்சி நிர்வாகம் தேடியது. எங்கு சென்று கொட்டினாலும், குப்பைகளைக் கொட்ட விடாமல் பொதுமக்கள் தடுக்கின்றனர். போலீஸ் படை மூலம், மக்களைத் தடுக்க நினைத்தபோது, அது பெரும் போராட்டமாக வெடித்தது. தற்போது என்ன செய்வதெனத் தெரியாமல் மாநகராட்சி நிர்வாகம் கைபிசைந்து நிற்கிறது. குப்பைகள் 30 ஆயிரம் டன் வரை தேக்க மடைந்துள்ளன. வார்டுகளில் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. தற்போது, இப்பிரச்னை கொழுந்து விட்டெரியத் துவங்கியிருக்கிறது. இதில், அரசியல் 'அனல்' பறக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ., மட்டுமல்லாது, தி.மு.க.,வின் கூட்டணிக்கட்சியினரும் கூட, குப்பைப்பிரச்னையில் மாநகராட்சியின் செயல்படாத தன்மை குறித்து ஆவேசமாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எம்.பி., சுப்பராயன் முதல்வரை நேரில் சந்தித்து பிரச்னையைத் தெரிவித்தார். உடுமலையில் பங்கேற்ற விழாவில், காணொலி மூலம், திருப்பூரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பயோ சி.என்.ஜி., மையங்களுக்காக 58 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் அடிக்கல் நாட்டினார். தற்போது இதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டதாக கூறினாலும், இடம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் 'வாய்' திறக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகமோ, அறிவியல்பூர்வத் தீர்வை நோக்கி இன்னும் நகரவில்லை; செயல்படுத்திப் பார்க்கவும் முயற்சிக்கவில்லை. அதேசமயம், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரும், வார்த்தைச் சொல்லாடல்களால் வசைமாரி பொழிகிறார்களே தவிர, தீர்வுக்கான கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கவில்லை. இது குப்பைப் பிரச்னையா, தேர்தல் பிரச்னையா என்ற விவாதமும் களைகட்டுகிறது. வார்டுகளில், குப்பைப்பிரச்னைக்கான தீர்வை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தும்போது, போராட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினரே கச்சைகட்டி களமிறங்கிவிடுகின்றனர். இதில் விழிபிதுங்கி நிற்பவர்கள் பொதுமக்கள்தான்.

வார்டுதோறும் பா.ஜ., போராட்டம்

மக்களிடம் இருந்து வரிகளை வசூலிக்கும் மாநகராட்சி, குப்பை விவகாரத்தை அலட்சியமாக கையாள்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளிலும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குப்பை கொட்டியுள்ள இடத்தில் கட்சியினர் திரண்டு நுாதனமாக போராட்டம் நடத்தினர்.வாழை இலையில் குப்பை திருப்பூர் லட்சுமி நகரில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் குப்பை கொட்டிய இடத்தில் தர்ணா செய்தனர். குப்பையால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில், வாழை இலையை விரித்து, அதில் குப்பையை கொட்டி நுாதனப்போராட்டம் மேற்கொண்டனர்.குப்பை மலர் வளையம் காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே அங்கேரிபாளையம் மண்டலத் தலைவர் சுதாமணி தலைமையில் போராட்டம் நடந்தது. 'சவப்பெட்டியில் மக்கள் வரிப்பணம்' என்ற வாசகத்துடன் சவப்பெட்டியை வைத்து, அதில் குப்பை மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, மாநகராட்சியின் குப்பை வரி எங்கே செல்கிறது என்பதை கேட்கும் விதமாக, 'குப்பை வரி காசோலை' உருவாக்கி, 120 கோடி ரூபாய் வீணாக்கப்படுவதை சுட்டிக்காட்டினர். திருப்பூர் பூ மார்க்கெட்டில் செரங்காடு மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் மந்தராசல மூர்த்தி, மாவட்ட செயலாளர் கார்த்தி, ஓ.பி.சி., மாநில செயற்குழு உறுப்பி னர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். மார்க்கெட்டில் ஆரம்பித்து, குப்பை கொட்டப்பட்ட இடம் வரை ஊர்வலம் நடந்தது.

முற்றுகையிடுவோம்

குப்பை பிரச்னையில், இரு வாரங்களுக்குள் தீர்வு ஏற்படுத்த வேண்டும். திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அலுவலகத்தை மக்களுடன் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.- சீனிவாசன்,தலைவர்,திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,

விரைவில் தீர்வு: மேயர்

திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:மாநகரின் குப்பை பிரச்னைக்கு தற்போது தீர்வு கண்டுள்ளோம். அமைச்சர் நேருவை, கோவையில் சந்தித்து, 'பயோ சி.என்.ஜி.,' திட்டத்துக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது.குப்பை தொடர்பாக மாற்றம் மக்கள் மத்தியில் இருந்து முதலில் தொடர வேண்டும். நகரில் சேகரமாகி உள்ள குப்பைகளை இந்த வார இறுதிக்குள் வெளியேற்றிவிடுவோம். மக்கள் அச்சப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள்.நான் துாங்கி, 30 நாட்களாகி விட்டது. மூன்றாண்டுகள் உழைத்தும், குப்பை பிரச்னை எங்களுக்கு சவாலை ஏற்படுத்தி விட்டது.கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது. தற்போது, நாளொன்றுக்கு 780 டன் சேகரமாகிறது. பயோ சி.என்.ஜி., திட்டம் அரசிடம் கேட்டு பெறப்பட்டது. மாநகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்கு பிரத்யேகமான நிரந்தரமான இடமில்லை. உறுதியாக, மூன்று முதல், ஐந்து மாதத்துக்குள் நிரந்தரமான தீர்வு காணப்படும். திடக்கழிவு மேலாண்மை குறித்து தவறான கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். நான் மேயராக பொறுப்பேற்ற பின், குப்பை எடை போட்டு வாங்கப்பட்டது. பயோ சி.என்.ஜி., திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அது தற்போதைக்கு வெளியே தெரிய வேண்டாம். தெரிந்தால், ஒரு போராட்டக்குழு வந்து விடும்.மக்கள் சிலர் தவறான போக்கை கையாள்கின்றனர். மாநகராட்சி குப்பையை எதற்கு, புறநகரில் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்கின்றனர். 'செயல் ஒன்றே சிறந்த சொல்'. மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை, பனியன் வேஸ்ட், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை பிரித்து வாங்க தயாராகிவிட்டோம். இதில் தளர்வுக்கு இடம் இல்லை. விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை அமலாகும்.

திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக்க யோசனைகள்

திடக்கழிவு ஆலோசகர் பேராசிரியர் வீரபத்மன் கூறியதாவது:திருப்பூரில் சேகர மாகும் கழிவுகள் குறித்து, மூன்று விதமாக ஆய்வு செய்தோம். நுாறு கிலோவுக்கு மேலான குப்பை; புறநகரில் சேகரமாகும் குப்பை; வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பை. இங்கு முறையாக மறுசுழற்சி செய்ய எந்தவிதமான வசதிகளும் இல்லை. இங்கு இடமில்லாமல் உள்ளது.உணவு கழிவுகள் இல்லாத, மற்ற குப்பைகளை கொடுத்தால், நாங்கள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பலாம். அதேசமயம் கழிவுகள் சரியாக ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான பிளான்ட் வாளையாறு(120 டன்) மற்றும் பொங்குபாளையத்தில்(45 டன்) அமைக்கப்பட்டுள்ளது.தனிநபர் அமைக்கும் போது, அரசால் இது சாத்தியப்படும். 45 டன் சுத்திகரிக்கும் வகையில் அமைக்கும் பிளான்ட்டுக்கு, 1.25 கோடி ரூபாய் செலவானது. அரசு செய்யும் போது, பெரிய அளவில் பிளான்ட்டை தாராளமாக அமைக்கலாம். 100 கிலோவுக்கு மேல் குப்பையை உற்பத்தி செய்யும், 5 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன.அவர்கள் தங்கள் கழிவுகளை நேரடியாக பிளான்ட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுதான் நடைமுறை. 65 சதவீதம் குப்பை ரோட்டுக்கு வராது.கழிவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மண்டல வாரியாக இதைச் செய்யலாம். ஒரு வாரத்தில் இது முழுவதுமாக சுத்தமாகி விடும்.தனி நிறுவனம் தேவை துப்புரவாளன் அமைப்பின் இயக்குனர் பத்மநாபன் கூறியதாவது:மாநகராட்சி நேரடியாக திடக்கழிவு மேலாண்மையை கவனிப்பது சிரமம். அரசு கண்காணிப்பில் பிரைவேட் லிமிடெட் போன்று தனி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இதை, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் அமைக்க வேண்டும். குப்பைகளை சேகரித்து, மறுசுழற்சி செய்யும் வகையில் அமைக்க வேண்டும். 50 முதல், 100 ஏக்கர் வரை, ஒரே இடத்தில் இந்த திட்டத்துக்கான அதிநவீன மெஷின்கள் மூலம் பிளான்ட் அமைக்க வேண்டும்.உதாரணமாக, குப்பையை வாங்கும் போதே பிரித்து வாங்க வேண்டும். 250 வீட்டுக்கு ஒரு வாகனம், என வார்டுக்கு, 20 வாகனங்கள் வழங்கி, அதற்கான பணியாளர்களை ஒதுக்கி, சேகரித்து வரும் குப்பையை, ஒரு பெரிய கன்டெய்னரில் மாற்றி, பிரதான மையத்துக்கு அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.இனிமேலாவது இப்பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண மாநகராட்சி முனைப்பு காட்ட வேண்டும்.மற்றவர்களை குற்றம் சுமத்தி கடந்து செல்கிறார் மேயர்மாநகராட்சி எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி:குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். போர்க்கால அடிப்படையில் நிதியை பெற்று இதை தீர்க்க வேண்டும். உரக்கிடங்கு ஒவ்வொரு மண்டலத்திலும் தயாராக உள்ளது. முறையாக கையாண்டு, நவீனப்படுத்தாமல் விட்டு விட்டனர். இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, ஒரு குழு அமைத்து பிரச்னையை சரி செய்ய வேண்டும். குப்பை விவகாரத்தை மேயர் சரியாக கையாளவில்லை. மற்றவர்களை குற்றம்சொல்லி கடந்து சென்று விடுகிறார். தற்போது கூட, குப்பைத் தொட்டிகளை வழங்கி தரம் பிரித்து வாங்குமாறு கூறுகிறோம். ஒரு வாரத்தில் தீர்வு ஏற்படுத்த வில்லையென்றால், கடையடைப்பு போன்ற பெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

நவீனத் தொழில்நுட்பம் அறிவிப்போடு முடக்கம்

காங்., கவுன்சிலர் செந்தில்குமார்:இன்றைக்குள் தீர்வுகாண்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனது வார்டில் இருந்து, 38 லோடு குப்பை எடுத்து செல்லப்பட்டது. இன்னும் 15 லோடு உள்ளது. தரம் பிரித்து வாங்கியிருக்க வேண்டும். இதற்கு முந்தைய காலத்தில் பிரச்னை வந்தது. பின், குப்பை மூலம் உரம் தயாரித்து செய்தோம். தற்போது, மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்பது மேயருக்கு தான் தெரியும். அதிநவீன தொழில்நுட்பம் போர்க்கால அடிப்படையில் தீர்வு ஏற்படுத்துவதாக பட்ஜெட்டில் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், ஒன்றும் செய்யவில்லை. நான்கு மாதம் முன்பே, இதை எடுத்து கூறினோம். இதை சரியாக செய்யாததாலும் மெத்தனத்தாலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது.

அ.தி.மு.க., - தி.மு.க., அரசுகள் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை

இந்திய கம்யூ., கட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன்:குப்பை பிரச்னை தொடர்பாக வார்டில் மற்ற கவுன்சிலர்களுடன் நாங்களும் மறியல் போராட்டம் செய்தோம். இது மக்கள் பிரச்னை; இதில் நிர்வாகம் அலட்சியமாக இருந்தால், பெரும் போராட்டமாக மாறும். ஒரு வார காலம் வரை, இப்பிரச்னை தாங்காது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு தான் முழுமையாக பெரிய திட்டம் தீட்ட வேண்டும். இதற்கு முன்பு இருந்த அ.தி.மு.க., மற்றும் தற்போது உள்ள தி.மு.க., அரசு, காலம் கடத்தி விட்டது. தற்போது இப்பிரச்னை கழுத்தை நெரிக்கிறது. ஒரு வார காலத்துக்குள் தீர்வு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

மக்கள் சொல்வது என்ன?

நொய்யல் ஆற்றில் குப்பை ஆலங்காட்டில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் முழுவதும் குப்பையை கொட்டி குவித்து விடுகின்றனர். இந்த குப்பை காற்றில் பறந்து, குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது. துர்நாற்றத்துடன் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது. குப்பையை தரம் பிரித்து வாங்க முன்வந்தாலும், மக்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ஈ, கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. சுகாதார கேட்டால் நோய் தொற்று அபாயம் உள்ளது.- நேத்ரா,ஆலாங்காடு.துப்புரவாளரும் மனிதர்களே குப்பையை பெற அன்றாடம் மாநராட்சி துாய்மை பணியாளர்கள் வருகின்றனர். மக்கள் பிரித்து கொடுப்பதில்லை. பணியில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வாங்குகின்றனர். குப்பையை முறையாக பிரித்து கொடுக்க வேண்டும்.- லட்சுமி,காலேஜ் ரோடு.பிளாஸ்டிக் கழிவு ஒழியணும் திருப்பூரில் பிளாஸ்டிக்பை களின் பயன்பாடு அதிகமாக உள் ளது. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதனால், மண்ணுக்கும், மக்களுக்கும் சீர்கேடு. துணி பை, பேப்பர் பை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்பைகளின் பயன்பாட்டால், குப்பைகள் அதிகரித்துள்ளது. இதனால், வருங்கால தலைமுறையினர் பாதிப்பு ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறோம். பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும்.- ராஜேஸ்வரி,சாமுண்டிபுரம்.எங்கும் துர்நாற்றம் வார்டு பகுதியில் குப்பை எடுக்க பணியாளர்கள் எட்டி பார்ப்பதில்லை. எங்கு பார்த்தாலும் குப்பையாக, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர் பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜமுனா,மண்ணரை.நோய் பரவும் அபாயம் குப்பை பிரச்னையால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளி, வணிக நிறுவனங்கள் அருகே மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது.- வெங்கடேஷ்,மண்ணரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
ஆக 25, 2025 09:02

Tie up with Singapore Waste Management Organizations and enter into a contract for waste management in a particular area first, get our persons trained and expand to other areas. Follow their methods of installing Ininerators at convenient places after segrating wastes and even the end ash product can also be used as water-proof bricks for use on roads, bridge walls, etc. Plastic wastes can be used for road making. IF THERE IS A WILL THERE IS ALWAYS A WAY. Unfortunately every scheme is aimed to swindle money.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை