மீண்டும் கூலி உயர்வு அறிவிப்பு; விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி
பல்லடம்; பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர், மீண்டும் கூலியை உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது, விசைத்தறியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. காடா துணி உற்பத்தியை பிரதானமாக மேற்கொண்டு வரும் விசைத்தறி தொழில் வாயிலாக, பல லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.விசைத்தறியாளர்களுக்கும் -ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையே, மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த, 2014ம் ஆண்டுக்குப் பின், கூலி உயர்வு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடந்தும், கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.கடந்த சில தினங்களுக்கு முன், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்களும், விசைத்தறி உரிமையாளர்களும் தாமாக முன்வந்து, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பயனாக, 2022ம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட கூலியை வழங்குவது என இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து, பல்லடம் சங்கத்தின் கிளை சங்கங்களான, மங்கலம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் உள்ளிட்ட சங்கங்களின் கீழ் உள்ள விசைத்தறியாளர்கள், ஏற்கனவே உயர்த்தப்பட்ட, 20 சதவீத கூலியை பெற்று பயனடைந்து வருகின்றனர்.இதற்கிடையே, தற்போது, ஜவுளி உற்பத்தியாளர்கள், மீண்டும் கூலி உயர்வு அறிவித்துள்ளனர். தொழிலை மேம்படுத்தவும், விசைத்தறியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், வரும், ஜூலை 1 முதல், அனைத்து ரகங்களுக்கும், 20 முதல் 30 பைசா வரை, தற்போது வழங்கப்பட்டு வரும் கட்டணத்துடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.ஜவுளி உற்பதியாளர்கள் பலரும் தாமாக முன்வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு வருவது, நீண்ட காலமாக கூலி பிரச்னையில் சிக்கி அவதிப்பட்டு வந்த விசைத்தறியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.