வரவில்லையா நல்ல நாள்!
திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் அரசு மருத்துவமனை கட்டுமான பணி முடிந்து நான்கு மாதங்களாகிறது. திறக்கப்படாமல் ஐந்து தளங்களை கொண்ட மருத்துவமனை கட்டடம் காட்சி பொருளாக மாறி வருகிறது.ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதி, 47.56 கோடி மதிப்பில், திருப்பூர், 15 வேலம்பாளையத்தில், 86 படுக்கைகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டும் பணி, 2022 பிப்., மாதம் துவங்கியது. இரண்டரை ஆண்டு நடந்த பணி, 2024 ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. ஐந்து தளத்தில், அறுவை சிகிச்சை அரங்கு, டயாலிசிஸ் சிகிச்சை, மூன்று அவசர கால ஐ.சி.யூ., 100 படுக்கை வசதி மற்றும் நவீன ஆய்வகங்கள் உள்ளன. இவ்வளவு வசதிகளை கொண்ட மருத்துவமனையின் பணிகள் முடிந்து, நான்கு மாதமாகியும் திறக்கப்படாமல், காட்சி பொருளாகவே உள்ளது. மக்கள் நகரின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு சிகிச்சைக்காக படையெடுத்து வருகின்றனர். 2 அமைச்சர் ஆய்வு
கட்டுமான பணிகள் முடிந்த பின், 2024 பிப்., மாதம் பொதுப்பணி, சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் துறையினர் ஆய்வு பணிகளை முடித்தனர். 2024ம் ஆண்டு துவக்கத்தில் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையிலான சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வை தொடர்ந்து, கடந்த ஆக., மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியமும் ஆய்வு நடத்தினர். இவர்கள் அரசுக்கு அறிக்கை வழங்கினர். தாமதம் ஏன்?
திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், '15 வேலம்பாளையம், புதிய அரசு மருத்துவமனைக்கு, குறைந்தபட்சம், 100 டாக்டர் உட்பட, 150 பேர் கொண்ட குழு நியமிக்க வேண்டும்.செவிலியர், ஊழியர் துவங்கி, சுகாதார பணி வரை அனைத்துக்கும் எவ்வளவு ஊழியர் என்ற விவரம் மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறைக்கு மூன்று மாதம் முன்னரே கருத்துருவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.புதியதாக பணி நியமனம் வழங்கும் போது சம்பளம் உட்பட பிற செயல்பாடுகளுக்கு நிதித்துறை ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் கிடைத்தால் செயல்பாட்டுக்கு வரும்,' என்றனர்.அவிநாசியில் அரசு மருத்துவமனை இருந்தாலும், முழுமையான மருத்துவ வசதிகளுடன் இல்லை. பெருமாநல்லுாரில் இருப்பது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தான். எனவே, திருப்பூர் வடக்கு பகுதி மக்கள் உயர்சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில், திருப்பூர் சென்று, அங்கிருந்து தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை உள்ளது.அதற்குள் பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். இது சில நேரங்களில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே, மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நோயாளிகளால் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திணறுகிறது. எனவே, திருப்பூர் வடக்கு பகுதிக்கான மருத்துவமனையாக, 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனை உள்ளது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவர்.