| ADDED : பிப் 07, 2024 01:35 AM
திருப்பூர்;'அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த குட முழுக்கில், லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்ட நிலையில், முகப்பு பகுதியை பொலிவூட்டுவதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா, கூறியதாவது:கம்பீர கோபுரம் கொண்ட, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழாவில், இரண்டரை லட்சம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரண்டனர். இது, பிரமிப்பை ஏற்படுத்தியது. விழா சிறப்புற நடக்க சிரத்தையெடுத்த மாவட்ட நிர்வாகம், ஹிந்து அறநிலையத்துறை, பேரூராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறையினருக்கு பாராட்டுகள்.கூட்ட நெரிசால், பக்தர்கள் சாலையில் நின்று, கோவிலை தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். அவிநாசி நெடுஞ்சாலை அகல விரிந்த கட்டமைப்பு கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, பாதியில் விடப்பட்டது. தற்போது, கட்டட கழிவுகள் சூழ்ந்த இடமாக அந்த இடம் காட்சியளிக்கிறது. அந்த இடத்தை முற்றிலும் சுத்தம் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே என்ற ஆதங்கம், பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனை போக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.