| ADDED : பிப் 22, 2024 05:18 AM
உடுமலை: அரசுப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும், இணைய வசதி பெறுவதற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்வித்துறை அறிவித்தது. இதன் அடிப்படையில், உடுமலை கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளில் இணைய வசதி பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.அரசு துவக்கப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கும் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளதால், இணைய வசதி பெறுவதிலும் பள்ளி நிர்வாகத்தினர் தீவிரம் காட்டினர்.இருப்பினும் உடுமலை சுற்றுப்பகுதியில், பல பள்ளிகளில் இதுவரை இணைப்பு வழங்காமல் தாமதப்படுத்துவதால், பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள், குறிப்பாக மார்ச் மாதத்தில் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை துவங்குவதற்கு, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன் அடிப்படையில், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக பயன்படுத்த உள்ள அறைகளை முழுமையாக துாய்மைப்படுத்தி, அதன் சூழலை தயாராக வைப்பதற்கும், மற்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வைப்பதற்கும், இணைய வசதியை விரைவில் பெறுவதற்கும் கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.மறுபக்கம் பிராண்ட் பேண்ட் இணைப்பு குறித்து, தொலைதொடர்பு துறையினர் தீவிரம் காட்டாமல் தாமதப்படுத்துவதால் பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.