பூண்டி நகராட்சி நிர்வாகம் மீது பா.ஜ., சரமாரி குற்றச்சாட்டு
அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் பால்ராஜிடம் (பொறுப்பு), பா.ஜ., நகர தலைவர் சண்முகபாபு தலைமையில், நிர்வாகிகள் அளித்த மனு குறித்து, அவர் கூறியதாவது:திருமுருகன்பூண்டி நகராட்சியில் அவுட்சோர்சிங் மற்றும் டிபிசி தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பணம் செலுத்தாமல் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை மட்டும் வைப்பு நிதியில் செலுத்தியுள்ளனர். அவர்கள் தரப்பிலிருந்து பங்குத் தொகையை செலுத்தவில்லை.பாலாஜி நகரில் உள்ள செம்மொழிப் பூங்கா (அம்ருத் திட்டம் 2.0) பராமரிப்பு பணிக்கான டெண்டரை முறைகேடாக மகளிர் சுய உதவி குழுவுக்கு ஒதுக்காமல் பூண்டி நகராட்சி கவுன்சிலர் பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. வார்டு எண்: 8-ல், துாய்மை பணியாளர் பாப்பாத்தியம்மாள் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பணியின்போது இறந்தார். தற்போது வரை காப்பீடு தொகை அவர் குடும்பத்தாருக்கு கிடைக்கவில்லை.ஒப்பந்ததாரர் முறையாக அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் தொகை செலுத்தி இருந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., பி.எப் ., என முழுமையாக கிடைத்திருக்கும். எனவே தனியார் நிறுவனத்தின் மீது உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.மனு அளிக்கும் நிகழ்ச்சியில், பா.ஜ., பொதுச் செயலாளர் சிவகுமார், பொருளாளர் மனோகரன், கவுன்சிலர் பார்வதி, முன்னாள் மண்டல தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொறுப்பாளர் அர்ஜுனன் உட்பட பலர் பங்கேற்றனர்.