கத்தியால் வெட்டி அட்டூழியம் அண்ணன் - தம்பி கைது
பொங்கலுார், : கொடைக்கானல் கே.சி.,பட்டி என்.பி., நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 22. பீஹாரை சேர்ந்தவர் தீபக் குமார், 25. இருவரும் கொடுவாய் அருகே ஓடக்கல்பாளையம் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகின்றனர்.அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பம்பம், 22 ராம்ஜீவன், 23 ஆகியோர் கொடுவாய் சென்று விட்டு, பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றனர். தீபக் குமாரும், ஜெயக்குமாரும் டூவீலரில்சென்றனர்.கொடுவாய் சமத்துவபுரம் ஓடை தரைப்பாலம் அருகே இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பின் அவர்களது டூ வீலரை உதைத்து கீழே தள்ளி ஜெயக்குமாரை கத்தியால் வெட்டி உள்ளனர்.அவர்களது மொபைல் போனையும், டூவீலரையும் பறித்தனர். உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்த நால்வரையும் மர்மநபர்கள் பைக்கில் துரத்திச் சென்று தீபக்குமார் மீது மோதினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் கொடுவாய் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன்கள் முகமது ரபி, 31 முகமது இம்ரான், 27 ஆகியோரை கைது செய்து, டூவீலர் மற்றும் கத்தி, மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.