உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா சப்ளை புகார்! பள்ளியில் போலீசார் ஆய்வு: வாகன நிறுத்துமிடம் மாற்றம்

கஞ்சா சப்ளை புகார்! பள்ளியில் போலீசார் ஆய்வு: வாகன நிறுத்துமிடம் மாற்றம்

திருப்பூர்; நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கஞ்சா விற்கப்படுவதாக, பள்ளி மேலாண்மைக் குழுவினர் கலெக்டருக்கு புகார் வழங்கியது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், திருப்பூர் வடக்கு போலீசார் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பூர், பி.என்.ரோட்டில், நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலை மற்றும் துவக்கப்பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், கலெக்டருக்கு அனுப்பப்பட்ட மனுவில், 'பள்ளி வளாகம் முன், வாடகை வாகனங்கள் வரிசைக்கட்டி நிறுத்தப்படுவதால், மாணவர்களை கொண்டு வந்து விடும் பெற்றோருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுதவிர, மறைவான இடங்களில் மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன' என கூறியிருந்தனர்.இதுகுறித்த செய்தி, நேற்றைய 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் பிரசுரமானது. இதையறிந்த, திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் நேற்று காலை பள்ளிக்கு சென்று, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினருடன் புகார் குறித்து கேட்டறிந்தனர். பின், பள்ளி வளாகம், வாடகை வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படும் பள்ளி வளாகத்தை பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் கூறியதாவது:பள்ளி வளாகத்தில் பெற்றோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படும் வாடகை வாகனங்களை, வேறு இடத்தில் நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு, அங்கு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படாத வகையில் 'பேரி கார்டு' வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு போதை வஸ்துகள் எதுவும் விற்கப்படுகிறதா என, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது உரிய மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அத்தகைய பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.போலீசாரின் இந்த நடவடிக்கை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்ற கண்காணிப்பு தொடர வேண்டுமெனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ram
பிப் 05, 2025 11:08

காவல்துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது, இப்போது காவல் துறை ஆட்கள், திருட்டு திமுக சாதாரண ஆட்களுக்கு பயந்து கொண்டு வேலை செய்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை