ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் மாட்டுப்பொங்கல் கோலாகலம்!
திருப்பூர் : ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கோசாலையில், நேற்று மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களுக்கு, கோசாலை பராமரிக்கப்படுகிறது. அங்கு, நான்கு கன்றுகள், ஒரு காளைமாடு மற்றும் பசுமாடுகள் என, 10 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. தினமும், அதிகாலை, 5:30 மணிக்கு, இரண்டு கோவில்களிலும், கோபூஜை செய்து, அன்றாட பூஜைகள் துவங்குகின்றன.திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் மற்றும் சில ஆன்மிக அமைப்புகள் சார்பில், ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, கோசாலையில், நேற்று பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.அனைத்து மாடுகளையும் அலங்கரித்து, கரும்புகள் நட்டு வைத்தும், தோரணம் கட்டியும், கோசாலை அலங்கரிக்கப்பட்டது. தலைவாழை இலையில், தேங்காய், பழம், சர்க்கரை பொங்கல் ஆகியவை வைத்து படைக்கப்பட்டது.பட்டாச்சாரியார்கள், கோவில் பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, கால்நடைகளுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவாக, சிறிய தெப்பக்குளம் அமைத்து, தண்ணீர் விடப்பட்டது. அதில், மாடுகள், முடக்கத்தான் கொடியை தாண்டி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.