துணை ஜனாதிபதிக்கு செல்லமுத்து வாழ்த்து
பல்லடம்; நம் நாட்டின், 15வது துணை ஜனாதிபதியாக, தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர், தொழில்துறையினர் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், நேற்று புதுடில்லி சென்ற உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். செல்லமுத்து கூறுகையில், ''தமிழ் இனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர் என்பதால், தமிழக மக்கள், விவசாயிகள், தொழில் துறையினரின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்ன என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே, மத்திய அரசு மற்றும் பிரதமரிடம் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை எடுத்துச் சென்று, உரிய தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.