சுத்தமான பழக்கம் உடல்நலன் சிறக்கும்
மாணவர்கள் தன் சுத்தம் பேணுவதைக் கடைபிடித்தால், பழக்கமாக்கிக்கொண்டால், உடல்நலனில் சிறக்கலாம். தற்போது, பரவிவரும் கொரோனா குறித்து பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.கடந்த பத்து நாட்களில் கொரோனா திடீரென வேகம் பெற்றுள்ளது.இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தமிழக பிரிவு தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெ.என்-., 1 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஓமிக்ரான் வகையில் துணை வைரஸ். தற்போது, சளி, இருமல், காய்ச்சல், போன்ற பொதுவான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.தவிர, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் கொரோனா காரணமாக அச்சம் கொண்டு பல்வேறு சந்தேகங்களை கேட்கின்றனர். இவ்வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது; ஆனால், பெரும்பாலானோருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.சாதாரண காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, சளி, வலிப்பு போன்றவை இதன் அறிகுறிகள். குழந்தைகள், இளம் வயதினர் பெரும்பாலும் எளிதாக மீண்டுவிடுகின்றனர். பெற்றோர் தாராளமாக பள்ளிகளுக்கு அனுப்பலாம். பள்ளிகளில் முன்னெச்சரிக்கை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான கைகழுவும் பழக்கம், சிறந்த காற்றோட்டம், அவசியம் எனில் முககவசம் பயன்படுத்தலாம். நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்கவேண்டும்.