உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிலோ தேங்காய் ரூ.63.96, கொப்பரை 220.11 ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம்

கிலோ தேங்காய் ரூ.63.96, கொப்பரை 220.11 ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம்

--- நிருபர் குழு -உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், ஒரு கிலோ ரூ.220.11க்கும், தேங்காய் கிலோ ரூ.63.96க்கும் விற்பனையானது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, 14 விவசாயிகள், 82 மூட்டையில், 4,100 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். ஏலத்தில், 8 வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம் கொப்பரை கிலோ 206.12 முதல், 220.11 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம், 145.76 முதல், 200.26 ரூபாய் வரை விற்பனையானது. மொத்த மதிப்பு, ஏழு லட்சத்து, 49 ஆயிரத்து, 33 ரூபாயாகும். தேங்காய் ஏலத்திற்கு, 8 விவசாயிகள், 43 மூட்டையில், 2,580 கிலோ கருப்புக்காய் கொண்டு வந்தனர். ஆறு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் 63.96 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 63.32 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 926 ரூபாயாகும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை, தேங்காய் உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் தரம் பிரித்து, இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்படுவதால், கூடுதல் விளை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விளை பொருட்களை கொண்டு வந்து, விற்பனை செய்து பயன்பெறலாம், என ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 95 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 200 ரூபாய் முதல், 211.20 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 106 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 96 ரூபாய் முதல், 190 வரை விலை கிடைத்தது. மொத்தம், 201 கொப்பரை மூட்டைகளை, 32 விவசாயிகள் கொண்டு வந்தனர். 7 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம், 15.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 90.45 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி