வரியில்லாத தர்பூசணி விலை சரிவால் கவலை
உடுமலை: கேரளா வியாபாரிகள் வருகை குறைவால், வரியில்லாத ரக தர்பூசணி விலை சரிந்து உடுமலை பகுதி விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக, கோடை சீசனை இலக்காக வைத்து பல ஆயிரம் ஏக்கரில், தர்பூசணி சாகுபடி செய்கின்றனர். இதில், பரவலாக வரிகள் இல்லாத கருப்பு, பச்சை தோல் கொண்ட வீரிய ரக தர்பூசணியும் சாகுபடி செய்கின்றனர்.இந்த ரக தர்பூசணி நீண்ட தொலைவு போக்குவரத்துக்கு ஏற்ற ரகம் என்பதால், கேரளா வியாபாரிகள் நேரடியாக உடுமலைக்கு வந்து, கொள்முதல் செய்து கொள்கின்றனர்.தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், இந்த ரக தர்பூசணியின் விலை, கிலோ 3 ரூபாய் என்றளவில் தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'கேரளா வியாபாரிகள் வருகை குறைந்துள்ளதால், இந்த ரக தர்பூசணிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், விரைவில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.