வேலை உறுதி திட்டத்தில் தொடர் விதிமீறல்! ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம்
உடுமலை; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணி ஒதுக்குவதில், ஊராட்சி நிர்வாகத்தினர் பாரபட்சம் காட்டுவதைக்கண்டித்து, அடிவள்ளி கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அடிவள்ளி. இக்கிராமத்தைச்சேர்ந்த, பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பி.டி.ஓ., மாலாவிடம் மனு கொடுத்தனர்.அம்மனுவில், புதுப்பாளையம் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடக்கிறது. பதிவு செய்த தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்குவதில்லை.பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளின் உறவினர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் வழங்குகின்றனர். இதனால், பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கின்றனர்.நாள்தோறும் வேலைக்கு செல்பவர்களை திருப்பி அனுப்புகின்றனர். பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. பணித்தளத்திலும், மேற்பார்வையாளர்கள் என்ற பெயரில், பலர் வேலை செய்யாமல், வலம் வருகின்றனர்.குறிப்பாக, அடிவள்ளி கிராமத்தில், பலருக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வேலை வழங்கப்படவில்லை. நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாள்தோறும் பணித்தளத்தில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.பணி ஒதுக்கீட்டில் நிலவும் முறைகேடுகள் மற்றும் தொடர் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட பி.டி.ஓ., ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பினர்.கிராம மக்கள் சார்பில், குடிமங்கலம் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் சார்பிலும், ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.