பிளஸ் 2 தேர்வு முடிவில் சாதித்த மாநகராட்சி பள்ளிகள்
திருப்பூர், : பிளஸ் 2 தேர்வு முடிவில் சின்னச்சாமி அம்மாள் பள்ளி, 9.82 சதவீத கூடுதல் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது. நஞ்சப்பா பள்ளி, 4.44 சதவீதம், பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, 3.81 தேர்ச்சி சதவீதம் குறைவாக பெற்றுள்ளது.சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு, 152 பேர் தேர்வெழுதினர்; 116 பேர் தேர்ச்சி; தேர்ச்சி சதவீதம், 76.32. நடப்பாண்டு, கூடுதலாக, 46 மாணவர்கள் சேர்த்து, 202 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 174 தேர்ச்சி பெற்றதால், தேர்ச்சி சதவீதம் 86.14. முந்தைய ஆண்டை விட, 9.82 தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. 1.13 சதவீதம் கூடுதல்
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 101 மாணவர், 81 மாணவியர் என, 182 பேர் கடந்தாண்டு தேர்வெழுதினர். 94 மாணவர், 79 மாணவியர் என, 173 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 95.05. நடப்பாண்டு, 149 மாணவர், 131 மாணவியர் என, 280 பேர் தேர்வெழுதினர்; 126 மாணவர், 126 மாணவியர் என, 266 பேர் தேர்ச்சி பெற்றனர்.முந்தைய ஆண்டை விட, 98 பேர் கூடுதலாக தேர்வெழுதிய நிலையில், கூடுதலாக, 1.13 சதவீத தேர்ச்சி பெற்று, 96.18 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது. ஒரு சதவீதம் உயர்வு
பழனியம்மாள் பள்ளியில் நடப்பாண்டு, 613 பேர் தேர்வெழுதி, 601 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 12 பேர் தேர்வாகவில்லை. தேர்ச்சி, 98.04 சதவீதம்.கடந்தாண்டு இப்பள்ளியில், 576 பேர் தேர்வெழுதினர்; 13 பேர் தேர்வாகவில்லை. தேர்ச்சி சதவீதம் 97.74. முந்தைய ஆண்டை விட, 37 மாணவியர் கூடுதலாக தேர்வெழுதியுள்ளனர். இருந்த போதும், தேர்ச்சி சதவீதம், 98.04 ஆக உயர்ந்துள்ளது.நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த முறை, 234 மாணவர்கள் தேர்வெழுதினர்; இவர்களில், 13 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 94.44. நடப்பாண்டு, 290 பேர் தேர்வெழுதினர்; இவர்களில், 29 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம் முந்தைய ஆண்டை விட, 4.44 சதவீதம் குறைந்து, 90 சதவீதம்.கடந்தாண்டு, 35 மாணவர், 40 மாணவியர் என, 75 பேர் மட்டுமே பத்மாவதிபுரம் பள்ளியில் தேர்வெழுதினர்; மூவர் தேர்ச்சி பெறவில்லை. 72 பேர் தேர்ச்சியால், 96 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றது. மாணவர்கள், 94.29 சதவீதமும், மாணவியர், 96 சதவீதமும் பெற்று அசத்தினர்.நடப்பாண்டு மாணவர், 62, மாணவியர், 66 என, 128 பேர் தேர்வெழுதினர்; மாணவரில் மூவரும், மாணவியரில் ஏழு பேரும் என பத்து பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர் தேர்ச்சி சதவீதம், 95.16 ஆக உயர்ந்த நிலையில், மாணவியர் தேர்ச்சி சதவீதம், 96ல் இருந்து, 89.39 ஆக சரிந்தது.இதனால், பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 96 சதவீதத்தில் இருந்து, 92.19 ஆக குறைந்துள்ளது. நுாற்றுக்கு நுாறு
திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு, 149 பேர் தேர்வெழுதினர்; இரண்டு பேர் தேர்ச்சி பெறாததால், 98.66 சதவீதம்.நடப்பாண்டு, 150 பேர் தேர்வெழுதினர்; அனைவரும் தேர்ச்சி பெற்றதால், நுாறு சதவீதம் தேர்ச்சி தந்த ஒரு மாநகராட்சி பள்ளியானது குறிப்பிடத்தக்கது.தக்க வைத்த ஜெய்வாபாய் பள்ளிமாநிலத்தில் அதிக மாணவியர் படிக்கும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடந்தாண்டு, 1,198 பேர் தேர்வெழுதியுள்ளனர்; இவர்களில், 1,096 பேர் தேர்ச்சி பெற்றனர். 102 பேர் தேர்ச்சி பெறவில்லை. நடப்பாண்டு, 1,233 மாணவியர் தேர்வெழுதியதில், 1,178 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 55 பேர் தேர்ச்சி பெறவில்லை. முந்தைய ஆண்டை விட, 35 மாணவியர் கூடுதலாக தேர்வெழுதிய நிலையில், தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை, 102 லிருந்து, 55 ஆக குறைந்துள்ளது; தேர்ச்சி சதவீதம் 95.47; நடப்பாண்டு, 95.54.