உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்  நெரிசல்; கைக்குழந்தையோடு பரிதவித்த தாய்மார்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்  நெரிசல்; கைக்குழந்தையோடு பரிதவித்த தாய்மார்கள்

திருப்பூர்; திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நேற்று நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவுக்க, கை குழந்தையுடன் தாய்மார்கள் பலர், நெரிசலில் சிக்கி தவித்தனர். திருப்பூர் மாநகராட்சியின் 36, 42, 43 வது வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நடராஜா தியேட்டர் ரோட்டிலுள்ள திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நடத்தப்பட்டது. விண்ணப்பங்கள் பதிவு, ரோட்டரி வளாகத்திலும், மகளிர் உரிமைத்தொகைக்கான பதிவுகள், நேர் எதிரே உள்ள புகை பரிசோதனை நிறுவனம் அமைந்துள்ள வளாகத்திலும் நடைபெற்றன. பட்டா மாறுதல், உட்பிரிவு, புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், டேரீப் மாற்றம், ஆதார் பதிவு மற்றும் திருத்தம் உள்பட பல்வேறுவகையான விண்ணப்பங்கள் அளிப்பதற்காக, உரிய ஆவணங்களுடன் வந்தனர். பொதுமக்களுக்கு டோக்கன், விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு, இரும்பு தடுப்புகளால் அமைக்கப்பட்டிருந்த சேம்பருக்குள் அமர வைக்கப்பட்டனர். டோக்கன் அடிப்படையில், அடுத்த சேம்பருக்கு அனுப்பப்பட்டு, அங்கு பதிவேட்டில் மனுதாரரின் பெயர், விவரங்கள் பதியப்பட்டது. அதன்பின்னரே, இரும்பு தடுப்புக்குள் அமர்ந்திருத்த பொதுமக்கள், விண்ணப்ப பதிவு பகுதிக்கு விடுவிக்கப்பட்டனர். அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் பலரும் ஆத்திரமடைந்தனர். பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்த உடனேயே, விண்ணப்ப பதிவு பகுதிக்கு செல்ல முண்டியடித்தனர். போலீசாரும், பணியில் இருந்த அலுவலர்களும் பொதுமக்களை தடுத்தனர். தடைய மீறி பொதுமக்கள் உள்ளேசெல்ல முயன்றதையடுத்து, போலீசார், அரசு அலுவலர்களுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய ஆதார் பதிவு, பெயர், முகவரி, மொபைல் போன் எண் திருத்தம் செய்ய, ஆதார் கவுன்டர்களிலும் ஏராளமானோர் காத்திருந்தனர். டோக்கன் பெற்றுக்கொண்டு உள்ளே வந்தோர் ஒவ்வொருவரும், விண்ணப்பம் பதிவு முடிந்து வெளியேற மூன்று முதல் 5 மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. நீண்ட நேர காத்திருப்பால், பலரும் சோர்வுடனேயே வீடு திரும்பினர். மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமே முகாமில் பங்கேற்று, பதிவு செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய முகாமிலும், இதற்காக பெண்கள் கூட்டம் அலைமோதியது. சில தாய்மார்கள் கைக்குழந்தையோடு வந்திருந்தனர். கூட்ட நெரிசலில், குழந்தையை ஒருகையில் தாங்கியபடி, மற்றொரு கையில் விண்ணப்பங்களை வைத்துக்கொண்டு, நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். கூட்டத்தை கண்டு மிரண்டு அழுத குழந்தைகளை சமாதானப்படுத்த, மிகவும் சிரமப்பட்டனர். திரும்பிச் சென்ற பெண்கள் -------------- நேற்றைய முகாம், மாநகராட்சியின் 32, 42, 43 வார்டுகளுக்காகவே நடத்தப்பட்டது. அருகாமையிலுள்ள வேறு வார்டுகளை சேர்ந்த பெண்கள் பலர், உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வந்தனர். பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், 'உங்க வார்டுக்கு நடக்கும் போது, அங்கு சென்று கொடுங்கள்; இங்கு, 32,42,43 வார்டு மக்களிடமிருந்து மட்டும்தான் விண்ணப்பங்கள் பெறப்படும்' என கூறி, பெண்களை திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை