வனவிலங்குகளால் கேள்விக்குறியாகும் சாகுபடி; குறைதீர் கூட்டத்தில் ஆவேசம்
உடுமலை; காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் தொடர் சேதத்தால், விவசாய சாகுபடியையேகைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,' என வனத்துறையின் குறை தீர் கூட்டத்தில், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.உடுமலை வனச்சரக அலுவலகத்தில், உடுமலை, அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. வனச்சரக அலுவலர்கள் புகழேந்தி (அமராவதி), மணிகண்டன் (உடுமலை) தலைமை வகித்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது: கல்லாபுரம், வேல்நகர் பகுதியில், குரங்குகள், தென்னந்தோப்புகளில் அதிக சேதம் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய் மற்றும் இளநீரை குரங்குகள் கூட்டம் சேதப்படுத்துகின்றன.கடந்தாண்டு, வனத்துறை சார்பில் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சில குரங்குகள் பிடிபட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. பின்னர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், தற்போது நுாற்றுக்கணக்கான குரங்குகள் அப்பகுதியில் முகாமிட்டு, தேங்காய்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.வனப்பகுதியில் இருந்து வெகுதொலைவு தள்ளியுள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் ஏற்படுத்தும் தொடர் சேதம் காரணமாக, சாகுபடியையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், இலுப்பநகரம், அம்மாபட்டி என 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்காச்சோள சாகுபடியில், காட்டுப்பன்றிகள் அதிக சேதம் ஏற்படுத்தி வருகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் பாசன நீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்கிறோம். அறுவடைக்கு தயாராகும் போது, காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து, பயிர்களை முற்றிலுமாக அழித்து விடுகிறது.பல விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும் தெரியவில்லை. சில கிராமங்களில் மனிதர்களும், காட்டுப்பன்றிகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.இதே நிலை நீடித்தால், பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு, விவசாயிகள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.வனத்துறை அலுவலர்கள் தரப்பில், 'வனவிலங்குகளால், சாகுபடியில் ஏற்படும் சேதத்துக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள், நிவாரணம் கேட்டு உடனடியாக விண்ணப்பிக்கலாம். காட்டுப்பன்றிகளால் சேதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, அரசு வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.