மானியத்தொகை வழங்குவதில் தாமதம்; அரசு பள்ளிகளில் பணிகள் பாதிப்பு
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், பராமரிப்பு மானியத்தொகை கல்வியாண்டு முடியும் நிலையிலும் தொடர்ந்து தாமதமாகிறது.அரசு துவக்கம் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை, சிறிய மராமத்து பணிகள் மேற்கொள்ளவும், பராமரிப்பு பணிகளுக்கும் கல்வியாண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் மானியத்தொகை வழங்கப்படுகிறது.1 முதல் 30 எண்ணிக்கையிலான மாணவர் எண்ணிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாயும், 31 முதல் 100 எண்ணிக்கைக்கு, 25 ஆயிரமும், உயர்நிலை பள்ளிகளுக்கு, 50 ஆயிரமும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 75 ஆயிரமும் ஒதுக்கப்படுகிறது.இத்தொகை, பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது. இத்தொகையை சுகாதாரப்பணிகளுக்கும், கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்த வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு, முதல் பாதி மானியத்தொகை மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளது.கல்வியாண்டு முடிவதற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்படுவதால், பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளும் பாதிக்கப்படுகிறது.சில பள்ளிகளில், ஆசிரியர்களின் முயற்சியால் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. பல பள்ளிகளில் சிறிய மராமத்து பணிகளுக்கும் இத்தொகையை எதிர்பார்த்துள்ளனர். இதனால் பெற்றோரும் அதிருப்தியடைகின்றனர்.இரண்டாம் கட்ட பள்ளி மானியத்தொகையை தாமதமில்லாமல் வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.