டிப்போ சுவர் இடிப்பு; மாற்றுப்பாதையில் பஸ்கள்
திருப்பூர், ; திருப்பூர் பஸ் டிப்போ சுவர் இடிக்கப்பட்டு, பஸ்கள் மாற்றுப்பாதையில் கிளைக்கு சென்று திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் - காங்கயம் ரோட்டில், அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போ உள்ளது. இங்கிருந்து தினமும் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு, 136 பஸ்கள் இயங்குகிறது. சில தினங்களுக்கு முன் காங்கயம் ரோடு டிப்போ ஸ்டாப் முன்புறம் உள்ள நுழைவாயில் கேட் மூடப்பட்டது.டிப்போ பின்புறம் செல்லும் வழியில் வலதுபுறம் சுவர் இடிக்கப்பட்டு மாற்று வழி உருவாக்கப்பட்டது. கடந்த, 20 நாட்களாக காங்கயம் ரோட்டில் இருந்து வந்து வளைவில் திரும்பி, புதிய தற்காலிக வாயில் வழியாக பஸ்கள் பெட்ரோல் அடிக்க சென்று திரும்புகின்றன. இரவில் டிப்போ திரும்புவதற்கும், காலையில் செல்வதற்கும் பஸ்கள் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர். தற்காலிக வழியில் கதவு இல்லை.ஒரு பாதுகாவலர் மட்டுமே இருப்பதால், அரசு பஸ்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'காங்கயம் ரோடு நுழைவாயிலில் சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக இருந்தது. பஸ்கள் ஆட்டம் கண்டு உள்ளே சென்று திரும்பியது. டிரைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்ததால், சிமென்ட் சாலை, கான்கிரீட் ஊற்றி, புதிய ரோடு போடப்படுகிறது.இதனால், தற்காலிகமாக மெயின் கேட் பூட்டப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். பஸ் உள்ளே வந்து செல்ல தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ள வழி, மூடப்படும்,' என்றனர்.