உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துணை முதல்வர் உதயநிதி இன்று வருகை: புதுப்பொலிவுடன் கலெக்டர் அலுவலகம்

துணை முதல்வர் உதயநிதி இன்று வருகை: புதுப்பொலிவுடன் கலெக்டர் அலுவலகம்

திருப்பூர்; துணை முதல்வர் வருகையை முன்னிட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.துணை முதல்வர் உதயநிதி, மாவட்ட அளவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய, இன்று திருப்பூர் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். காலை, 10:00 மணிக்கு, ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை சிலை அருகே, மறைந்த முன்னாள் தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கருணாநிதி நுாலகம் திறப்பு

தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஏ.பி.டி.. ரோடு சூர்யா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நுாலகத்தை திறந்து வைக்கிறார். காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, மாவட்ட அளவிலான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.மதியம் 1:00 மணிக்கு, பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற உள்ள திருப்பூர் மாவட்ட தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலையில், ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார்.துணை முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்துக்காக, மாவட்ட நிர்வாகம், கடந்த ஒரு வாரமாக தயாராகி வருகிறது. எவ்வித ஆய்வு கூட்டங்களிலும் பங்கேற்காமல், கலெக்டர் கிறிஸ்துராஜ் முழுவீச்சில் இப்பணிகளை செய்து வருகிறார்.

பயனாளிகள் தேர்வு மும்முரம்

ஆய்வுக்கூட்டத்தின் நிறைவாக, பல்வேறு அரசுத்துறை சார்பில், அரசு நலத்திட்ட உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு அரசுத்துறையில் இருந்தும், பயனாளிகள் தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக முழுவீச்சில் நடந்து வந்தது.

பொலிவான கலெக்டர் அலுவலகம்

கலெக்டர் அலுவலகத்தின், 'போர்டிகோ' முகப்பில், திருப்பூர் மாவட்டத்தின் சிறப்புகளை விவரிக்கும் வகையிலான சுவர் சித்திரங்கள் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளன. 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற வாசகம், பிரதான நுழைவாயில் முன் எழுதப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாவது தளம் வரையில் உள்ள பகுதிகள், படிக்கட்டு பகுதிகள், கலெக்டர் அறை அமைந்துள்ள பகுதிகளில், பெயின்டிங் செய்து 'பளிச்'சென மாற்றியுள்ளனர். துணை முதல்வர் வருகையை முன்னிட்டு, திருப்பூர் நகரப்பகுதியில், பல்லாங்குழியாக உள்ள ரோடுகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு அடைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ