உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆகாசராயர் கோவிலில் திருப்பணி: ஆகமவிதிகள் மீறுவதாக பக்தர்கள் புகார்

ஆகாசராயர் கோவிலில் திருப்பணி: ஆகமவிதிகள் மீறுவதாக பக்தர்கள் புகார்

அவிநாசி; அவிநாசி ஆகாசராயர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளில் ஆகம விதிகள் மீறப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெறுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலாக ஆகாச ராயர் கோவில் உள்ளது.இக்கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது. அதில், கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடம் மற்றும் மண்டபத்திற்கும் இடையில் புதிதாக மதிற்சுவர் எழுப்பி உள்பகுதியில் வரவேற்பு வளைவு கட்டப்படுகிறது. இதனால், நேர்த்திக்கடன் செலுத்த கிடா வெட்டி பொங்கல் வைக்க வரும் போது பக்தர்களுக்கு இடநெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.ஆண்டுதோறும், சித்திரை மாதம் நடைபெறும் அவிநாசி கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பெரிய கருணைபாளையம் மற்றும் ராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மண் குதிரைகளை ஆகாசராயர் கோவிலுக்கு கொண்டு வருவது வழக்கம் இருந்து வருகிறதுஆனால், தற்போது கட்டப்படும் உள்பிரகார அலங்கார வளைவு நுழைவுப் பகுதி மிகவும் குறுகளாக உள்ளதால், குதிரையை சுமந்து கொண்டு பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படும். இதர விசேஷ நாட்களில், பக்தர்கள் அதிகளவில் கூடும் பொழுது, இட நெருக்கடி ஏற்படும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.பக்தர்கள் சிலர் கூறுகையில், 'ஆகாசராயர் கோவில் அருகில், நான்கு தனியார் மண்டபத்துக்கு ஆதரவாக ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செயல்படுகின்றனர். இதுதவிர, பாரம்பரியமாக கோவிலில் நடக்கும் சம்பிரதாயங்களை தொடர்ந்து செய்ய முடியாதபடி சிலர் செயல்படுகின்றனர்.ஏற்கனவே கோவிலை சுற்றி மதிற்சுவர் உள்ள நிலையில் புதியதாக கோவிலுக்குள் மற்றொரு சுவர் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எனவே, ஆகமவிதிகளை மீறாமலும், அறநிலையத்துறையின் விதிகளின்படியும், கோவிலின் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்,' என குற்றம்சாட்டினர்.

அனுமதி உள்ளது

பக்தர்களின் குற்றச்சாட்டு குறித்து, கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறியதாவது:ஆகாசராயர் சன்னதி முற்றிலும் சைவ தெய்வ வழிபாட்டுக்குரியது. இதனருகில் உள்ள அன்னதான கூட மண்டபத்தில் ஆடு, கோழி பலி கொடுத்து வழிபட்ட பின், ஆகாசராயர் கோவிலுக்கு வருவதை தடுப்பதற்காக மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது.திருப்பணி செய்வதற்கு முன் கூட்டம் நடத்திய போது ஒரு சில கிராம மக்கள் கேட்டுக் கொண்டதால், அறநிலைய துறையிடம் அனுமதி பெறப்பட்டு, உபயதாரர் வாயிலாக மதிற்சுவர் கட்டப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் அவிநாசி பெரிய கோவில் தேர்த்திருவிழாவுக்காக கொண்டுவரப்படும் மண் குதிரைகள், இனிமேல் வெளி பிரகாரத்தில் வைக்கப்படும்.கோவிலில் வளர்ச்சி பணிகள் பிடிக்காத ஒரு சிலர் வேண்டுமென்றே, தகராறு செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ