கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
திருப்பூர்; கணக்கெடுப்பில் விடு பட்ட மாற்றுத்திறனாளிகள், ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி, கடந்த 2023 நவ. 29ல் துவங்கி, 2024, செப்.30ம் தேதி வரை நடைபெற்றது.மகளிர் திட்ட ஊரக வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய களப்பணியாளர்கள், வீடுவீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து, பதிவு செய்துள்ளனர்.கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள், https:tnrights.tnega.org/registration/ என்கிற இணையதளத்தில், பெயர், மொபைல் எண், பாலினம், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி சான்றிதழ், மாவட்டம், தாலுகா, கிராமம் அல்லது நகரம் ஆகிய விவரங்களை பதிவு செய்யவேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.