பாசன நீரை மாசுபடுத்தும் கழிவுகளால் அதிருப்தி; அலட்சியத்தில் ஊராட்சிகள்
உடுமலை: பாசன கால்வாய் கரையில், கழிவுகளை குவிப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டும், ஊராட்சி அலுவலர்கள் அலட்சியமாக இருப்பது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் மனு அனுப்பியுள்ளனர். உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு மண்டல பாசனத்துக்கும், உடுமலை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது; இக்கால்வாய் வாயிலாக, 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கால்வாய், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளின் வழியாக செல்கிறது. அனைத்து பகுதிகளிலும், இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட கழிவுகள், கால்வாய் கரையிலும், பாசன நீரிலும் நேரடியாக கொட்டப்படுகின்றன. உதாரணமாக பள்ளபாளையம் கிராமத்தில், பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய் கரை முழுவதும் குவிந்து கிடக்கிறது. பாசன நீரில் அடித்துச்செல்லப்படும் இக்கழிவுகள், விளைநிலங்களில் தேங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன; நீர்நிர்வாகத்திலும் பிரச்னைகள் உருவாகிறது. கிராமத்தின் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஊராட்சி நிர்வாகத்தினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்; ஒன்றிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இது குறித்து, பாசன விவசாயிகள் திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் முழுமையாக செயலிழந்துள்ளது. குடியிருப்புகள் மட்டுமல்லாது, பாசன ஆதாரங்களையும் மாசுபடுத்துகின்றனர். உடுமலை கால்வாயில் நேரடியாக குப்பை கொட்டுவது குறித்து, கோட்ட அளவிலான குறை தீர் கூட்டத்தில், நுாற்றுக்கணக்கான முறை, மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் விரக்தியில் உள்ளோம். ஊராட்சிகள் தரப்பில், கால்வாய் கரையில் குப்பைத்தொட்டி மட்டும் வைத்தால் கூட, நேரடியாக பாசன நீரில் கழிவுகள் கொட்டுவது தவிர்க்கப்படும். அலட்சியமாக செயல்படும் ஊராட்சி, ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன நீர் மாசு அடையாமல் தடுப்பது அவசியமாகும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.