மாணவர்களின் ஆதார் பதிவுகளை புதுப்பிக்கணும்.. மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தல்
உடுமலை; பள்ளிகளில் ஆதார் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள மாணவர்களுக்கு, விடுமுறையில் 'பயோமெட்ரிக்' பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆதார் பதிவுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென பள்ளிகளில், ஆதார் சிறப்பு முகாம் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்டது.இதில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் பயோமெட்ரிக் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டன. விடுமுறை, குடியிருப்பு முகவரி மாற்றம், முறையான ஆவணங்கள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால், சில மாணவர்கள் இந்த முகாமில் விடுபட்டுள்ளனர்.தற்போது விடுபட்ட மாணவர்களுக்கு, பயோமெட்ரிக் பதிவு புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, 5 முதல் 7 வயது வரை உள்ள மாணவர்களுக்கு, முதற்கட்ட கட்டாய பயோமெட்ரிக் பதிவு, 8 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும், 15-17 மாணவர்களுக்கு அடுத்தகட்ட பதிவு புதுப்பித்தல் பணிகள் மூன்று கட்டமாக கடந்த கல்வியாண்டில் நடந்தது.இதில் விடுபட்ட மாணவர்களை கண்டறிய வேண்டும். அந்த மாணவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில், இ-சேவை மையங்கள், அஞ்சலகங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, அவர்களின் ஆதார் பதிவுகளையும் புதுப்பிக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி திறப்பின்போது, அனைத்து மாணவர்களும் கட்டாயம் பயோமெட்ரிக் புதுப்பித்து, தகுதியுள்ள ஆதார் எண்களை வைத்திருப்பதை, தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.இதன் வாயிலாக மட்டுமே, மாணவர்களுக்கு தடையில்லாமல் அரசின் சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை கிடைக்கும்.மேலும், வரும் புதிய கல்வியாண்டில் சேரும் மாணவர்களிடமும் புதுப்பிக்கப்பட்ட ஆதார் பதிவு இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.