மாவட்ட கால்பந்து போட்டி; அவிநாசி அணி வெற்றி
திருப்பூர்: திருப்பூரில் நடந்த மாவட்ட கால்பந்து போட்டியில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி, உடுமலை என்.வி. மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்று அசத்தின. பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட விளையாட்டு போட்டி, 4 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று, கே.செட்டிபாளையம் விவேகானந்தா பள்ளியில், 17 வயது மாணவியர் கால்பந்து போட்டி, நஞ்சப்பா பள்ளியில், 17 வயது மாணவர் கால்பந்து போட்டி நடந்தது. மொத்தம், 14 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது. மாணவியர் கால்பந்து இறுதி போட்டியில், உடுமலை, என்.வி. மெட்ரிக் பள்ளி - குன்னத்துார் என்.ஆர்.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின. 3 - 0 என்ற கோல் கணக்கில் உடுமலை அணி வெற்றி பெற்றது. மாணவர் கால்பந்து இறுதி போட்டியில், இன்பான்ட் ஜீசஸ் பள்ளி அணி, அவிநாசி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியுடன் மோதியது; இதில், 3 - 0 என்ற கோல் கணக்கில் அவிநாசி குறுமைய பள்ளி அணி வென்றது. இன்று, 14 வயது பிரிவு மாணவ, மாணவியருக்கான கால்பந்து போட்டி நடக்கிறது.