நாய்களுக்கு கு.க., மையம் பல்லடத்தில் அமைகிறது
பல்லடம் : பல்லடம், வடுகபாளையம் கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் அன்பரசு கூறியதாவது:திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம்தான், தெரு நாய்களுக்கு இதுவரை கு.க., செய்யப்பட்டு வருகிறது. நாய்களைப் பிடித்து திருப்பூர் கொண்டு சென்று, கு.க., செய்த பின் மீண்டும் பிடித்த இடத்திலேயே நாய்களை விடுவது நடைமுறையில் உள்ளது. சமீப நாட்களாக, தெரு நாய்களால் தொல்லை ஏற்பட்டு வருவதாக பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில்,கால்நடை துறை சார்பில், நாய்களுக்கு கு.க., செய்யும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மற்றும் பல்லடத்திலும் இந்த வசதி வரவுள்ளது. பல்லடம், வடுகபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் இதற்காக ஏ.பி.சி., எனும் 'பிறப்பு தடுப்பு மையம்' அமைய உள்ளது. நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உள்ள இந்த கருத்தடை மையத்துக்கென, பிரத்யேக நாய் பிடிக்கும் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழு மூலம், நாய்கள், கருத்தடை மையத்துக்கு கொண்டுவரப்பட்டு, இங்கு கு.க., செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்படும். கால்நடை துறை சார்பில், விரைவில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.