இ-நாம்ல் கொப்பரை ஏலம்: கிலோ ரூ.216க்கு விற்பனை
உடுமலை: உடுமலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.216க்கு விற்பனையானது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடந்த கொப்பரை ஏலத்திற்கு, 32 விவசாயிகள், 104 மூட்டை அளவுள்ள, 3,967 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 12 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ. 208.76 முதல், ரூ. 216.01 வரையும், இரண்டாம் தரம், ரூ. 163.73 முதல், ரூ. 192. 76 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு, ரூ. 7 லட்சத்து, ஒரு ஆயிரத்து, 967 ஆகும். உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது. இ-நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.