உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அந்தஸ்து உயர்ந்தும் அவலம் தீரலே... நிர்வாக தடுமாற்றத்தில் திக்குமுக்காடும் திருமுருகன்பூண்டி நகராட்சி

அந்தஸ்து உயர்ந்தும் அவலம் தீரலே... நிர்வாக தடுமாற்றத்தில் திக்குமுக்காடும் திருமுருகன்பூண்டி நகராட்சி

திருப்பூர் ; நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சியில், 17 மாதமாக கமிஷனர் பணியிடம் நிரப்பபடவில்லை. பிற அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதால், நிர்வாகப்பணிகள் ஸ்தம்பிக்கின்றன. பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த, 2021ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 15 வார்டுகளாக இருந்த பேரூராட்சி, எல்லை விரிவாக்கம் செய்யப்படாமலேயே, 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, நகராட்சி அந்தஸ்துடன் இயங்கி வருகிறது. இதன் வாயிலாக, சாலை கட்டமைப்பு, குடிநீர் வினியோகம், தெரு விளக்கு, சுகாதாரப்பணி என அனைத்தும் மேம்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தொடரும் தடுமாற்றம்

ஆனால், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து, நிர்வாக கட்டமைப்பில் தடுமாற்றமே தென்படுகிறது. நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கும் அதிகாரிகள், ஸ்திரத்தன்மையுடன் இருப்பதில்லை. வந்த வேகத்தில் பணி மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். அதே நேரம் பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்கள் தான் கமிஷனர் பதவிக்கு பணியமர்த்தப்படும் நிலையில், 'ரிஸ்க்' இல்லாமல் தங்களது பணிக்காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதே போன்று, பொறியாளர், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், நிர்வாக பணிகள் ஸ்தம்பிக்கின்றன.

சாலையில் குளம்

நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் உள்ள சாலைகள் பழுதாகி, வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்து கொண்டிருக்கிறது. கடந்த, 2022ல், ராக்கியாபாளையம் பகுதியில், புதிய நகராட்சி கட்டடம் கட்டுமானப் பணி துவங்கியது; பணி துவங்கி, 3 ஆண்டாகியும் இனி கட்டுமானப்பணி நிறைவு பெறவில்லை. அதே போன்று, பூண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் பெரியளவில் குழி ஏற்பட்டுள்ளது. மழையின் போது மழைநீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. நகராட்சி என்ற அந்தஸ்து பெற்றும், நிர்வாக தடுமாற்றத்தால், மக்கள் மத்தியில் திருப்தியற்ற நிலையையே பூண்டி நகராட்சி நிர்வாகம் எதிர்கொண்டு வருகிறது. பூண்டி நகராட்சியில், கடந்த, 17 மாதமாக கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. பொறுப்பு அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று கடந்த, 5 மாதமாக நகராட்சி மேலாளர் பணியிடம்; 2 ஆண்டுகளாக இளநிலை உதவியாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன

இயக்குனரிடம் புகார்

பூண்டி நகராட்சியில், கடந்த, 17 மாதமாக கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. பொறுப்பு அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று கடந்த, 5 மாதமாக நகராட்சி மேலாளர் பணியிடம்; 2 ஆண்டுகளாக இளநிலை உதவியாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஓராண்டாக பணி மேற்பார்வையாளர், வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 3 ஆண்டுகளாக தட்டச்சர் பணியிடம். 8 மாதமாக வருவாய் ஆய்வாளர் பணியிடம், 5 மாதமாக களப்பணி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், பொதுமக்கள் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரிடம் மனுவாக வழங்கியுள்ளேன். இதுதவிர, நகராட்சி எல்லையில், 118 கி.மீ., துார சாலைகள் மிக மோசமாக பழுடைந்திருக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 3 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதற்கெல்லாம் நிதி ஒதுக்க வேண்டும்; கடந்த, 3 ஆண்டுக்கு மேலாக இழுபறியில் உள்ள புதிய நகராட்சி அலுவலக கட்டுமானப்பணியை விரைவில் முடித்து, திறப்பு விழா நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளேன். - குமார், பூண்டி நகராட்சி தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை