ராஜவாய்க்காலில் கழிவு நீர் கலப்பு :நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
உடுமலை: அமராவதி ராஜவாய்க்காலில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுக்க குமரலிங்கம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை அமராவதி அணையிலிருந்து, அமராவதி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், ராஜவாய்க்கால் வாயிலாக, விளைநிலங்களுக்கு செல்கிறது. குமரலிங்கம் சுற்றுப்பகுதியில், நெல், கரும்பு உள்ளிட்ட சாகுபடிகளுக்கு ஆதாரமாக இருக்கும் ராஜவாய்க்கால் நிலைமை தற்போது பரிதாபமாகியுள்ளது. குமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து, வெளியேறும் கழிவு நீர் நேரடியாக ராஜவாய்க்காலில், கலக்கிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து, சில பகுதிகளில், சாக்கடை கால்வாயாகவே, ராஜவாய்க்கால் மாறி விட்டது. தண்ணீரை நேரடியாக பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது. பாசன நீரானது, கழிவு நீராக மாறுவதால், பல்வேறு பிரச்னைகளை, விவசாயிகளும், அப்பகுதி மக்களும் சந்தித்து வருகின்றனர். நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு சிறப்புத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், பாசன ஆதாரமான ராஜவாய்க்காலை மீட்க, நீண்ட காலமாக எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: குடியிருப்புகளில் இருந்து நேரடியாக ராஜவாய்க்காலில், கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில இடங்களில், வாய்க்காலை ஒட்டி, பன்றிகள் வளர்ப்பு குடிலும் அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.