தென்னையை தாக்கும் பல்வேறு நோய்கள் விவசாயிகள் பாதிப்பு
உடுமலை : தென்னையில் பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பாதித்து வரும் நிலையில், நோய்களை கட்டுப்படுத்தவும், உரிய இழப்பீடு வழங்கவும் வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.உடுமலையில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:உடுமலை பகுதியிலுள்ள பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகளுக்கு, இன்சூரன்ஸ் காலக்கெடு முடிந்தும், மூன்று மாதமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது.அதே போல், 21 நாட்களை கொண்ட பட்டுக்கூடு உற்பத்தில், 7 ஆக பிரித்து, இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, கடந்தாண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது.அதே போல், அமராவதி, ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியிலுள்ள தனியார் நுாற்பாலை, நுாற்றுக்கணக்கான விவசாயிகளிடம் கொள்முதல் செய்த, பட்டுக்கூடுகளுக்கு, 30 லட்சம் ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளது.அதே போல், மொபைல் அங்காடி என்ற பெயரில், 'லெவி' வசூல் செய்து, அரசுக்கு செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும்.உடுமலை நகராட்சி சந்தையில், விவசாய விளை பொருட்கள் விற்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.விளை பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், கொள்முதல் செய்த காய்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ரோட்டிலேயே நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. இறைச்சி, மீன் கடைகளே அதிகளவு உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்தாததோடு, ஊராட்சிகளுக்கு மீட்டர் பொருத்தாமல் உள்ளதால், கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.உரக்கடைகளில், யூரியா வாங்க சென்றால், மற்ற பொருட்கள் வாங்க வேண்டும், என கட்டாயப்படுத்தப்படுகிறது. வேளாண் இடு பொருட்கள், விதை விற்பனை நிலையங்களை கண்காணிக்க வேண்டும்.தென்னையில், கேரளா வாடல் நோய், பென்சில் முனை தாக்குதல் என பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக, மகசூல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்கவும், நோய்கள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் பொறியியல் துறையில், விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், விவசாயிளுக்கு அரசு திட்டங்கள் சென்று சேருவதில்லை.3 கி.மீ., துாரம் தள்ளி அலுவலகம் அமைந்துள்ள நிலையில், வேளாண் விற்பனை கூடம், ஒருங்கிணைந்த வேளாண் மையம் அமைந்துள்ள பகுதிக்கு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.காட்டுப்பன்றிகளால், மக்காச்சோளம், நெல், கரும்பு என அனைத்து பயிர்களும் பாதித்து வருகின்றன. புகார் கொடுத்தாலும், சொற்ப அளவிலான இழப்பீடு மட்டுமே வழங்கப்படுகிறது.வன எல்லையிலிருந்து பல கி.மீ., துாரம் பரவியுள்ளதோடு, கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் தாலுகா சர்வே துறையில், தொடர்ந்து முறைகேடுகளும், பணம் பறிக்கும் செயல்களும் அரங்கேறி வருகிறது.அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்யவும், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.இவ்வாறு, பேசினர்.