பட்டுக்கூடுகளுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பு; நுாற்பாலை மீது விவசாயிகள் புகார்
உடுமலை; விவசாயிகளிடம் பட்டுக்கூடு கொள்முதல் செய்த பணத்தை வழங்காமல், ஏமாற்றி வரும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், தொகையை பெற்றுத்தருமாறும், உடுமலை கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி ஈஸ்வரன் மற்றும் விவசாயிகள் அளித்த மனு:உடுமலை, அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சில்வர் மைன்ஸ் என்ற தனியார் பட்டு நுாற்பாலை நிறுவனம், விவசாயிகளிடம் பட்டுக்கூடு கொள்முதல் செய்து வருகிறது.இந்த நிறுவனம், கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய பட்டுக்கூடுகளுக்கு, கடந்த, 9 மாதமாக தொகை வழங்கவில்லை.மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு, ரூ.30 லட்சம் வரை, பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதோடு, ஏமாற்றி வருகிறது. மேலும், இந்த சில்வர் மைன்ஸ் நிறுவனம் அரசு மொபைல் அங்காடியாகவும் செயல்பட்டது.இதற்கு, கையாளும் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து, 0.75 சதவீதம், 'லெவி' என வசூல் செய்து, அதனை அரசுக்கு செலுத்தாமல், கடந்த, 5 ஆண்டுகளில், ஏறத்தாழ, 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது.இது குறித்து, பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகளை ஏமாற்றியுள்ள அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளுக்குரிய தொகையை பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.