உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணையும் விவசாயிகள்

தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணையும் விவசாயிகள்

திருப்பூர்; பல்வேறு கோரிக்கை, குறைகளை சம்பந்தப்பட்ட அரசுத்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதிகாரிகளுக்கு மனு வழங்குவது, கிராமம் தோறும் சென்று விவசாயிகளிடம் பேசி அவர்களின் ஆதரவு திரட்டுவது என செயல்பட்டு வந்த விவசாய சங்கத்தினர், தற்போது விவசாயிகளை திரட்டி, 'வாட்ஸ் ஆப்', 'டெலிகிராம்' போன்ற குழுக்களை துவக்கிக் கொள்கின்றனர்.அதில், தங்கள் தகவல்களை பரிமாறுவது, செய்தித்தாள்களில் வரும் செய்திகளை பகிர்வது, அந்த செய்திகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவது என, இயங்கி வருகின்றனர்.சில விவசாய சங்கங்கள், தங்கள் கோரிக்கை தொடர்பாக விவசாயிகளை ஒருங்கிணைத்து 'கூகுள் படிவம்' வாயிலாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்பது, அதை செயல்படுத்துவது என தங்களது பணியை எளிமையாக்கி வருகின்றன. சமீப நாட்களாக, வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய் களின் தொல்லை அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் தோட்டங்களில் புகுந்து பட்டியில் கட்டப்பட்டுள்ள ஆடுகள், பண்ணைகளில் உள்ள கோழிகளை, நாய்கள் கடிப்பதால், அவை உயிரிழக்கின்றன. இறக்கும் கால்நடைகளுக்கு விவசாயிகள் இழப்பீடு கேட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசுக்கு இதுதொடர்பான பரிந்துரையும் அனுப்பப்பட்டிருக்கிறது.அரசின் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்க, விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர்.இதுதொடர்பாக கூகுள் படிவம் தயாரித்து, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக விவசாயிகளின் கருத்துக்கேட்க துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !