நீர் திறப்புக்கு முன் பி.ஏ.பி., கால்வாய்களை துார்வாருங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை; பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு முன், வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை கொண்டு, பகிர்மான கால்வாய்களை துார்வார வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் பரமசிவம்: விவசாயத்திற்கு அடுத்ததாக, திருப்பூர் மாவட்டத்தில் பால் உற்பத்தி தொழில் உள்ளது. அதிகாரிகள் அலட்சியம், உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் விலை உயராததால், 432 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இருந்த நிலையில், தற்போது, 323 ஆக குறைந்துள்ளது.திருப்பூர் ஆவின் ஒன்றியம் உருவாக்கபட்டு, 5 ஆண்டுகளான நிலையில், பால் குளிரூட்டும் நிலையங்கள் இல்லாததால், கோவை, ஈரோடு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், ஆவின் ஒன்றியம் செலவு அதிகரிக்கிறது.எனவே, குடிமங்கலம் பகுதியில், குளிரூட்டும் நிலையம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும். அதே போல், திருப்பூர் ஒன்றியம் பிரிக்கும் போது, கோவை ஆவின் வழங்க வேண்டிய, ரூ.30 கோடி வழங்கவில்லை.பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனம் நிறைவடைந்து, 3ம் மண்டலத்திலுள்ள, ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு விரைவில் நீர் திறக்கப்பட உள்ளது. பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் பராமரிக்க உரிய நிதி ஒதுக்கவில்லை. அதே போல், ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு மேல், பகிர்மான கால்வாய் அமைந்துள்ளது.இரு ஆண்டுகளாக நீர் வழங்காத நிலையில், புதர் மண்டி, அழிந்துள்ளன. அவற்றை, வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை கொண்டு, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் வளத்துறை சார்பில், இதற்கான கடிதம் ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ஜெகதீசன்: வன எல்லை கிராமங்களில், காட்டுப்பன்றிகள் மட்டுமின்றி, குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. தென்னை மரங்களிலுள்ள இளநீர், காய்களை வீணாக்குவதோடு, பயிர்களை அழித்து வருகிறது.வனத்துறை சார்பில், கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.வேளாண் பொறியியல் துறை சார்பில், மலைப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணைகள் உடைந்தும், ஓட்டை விழுந்தும் மழைநீர் சேமிக்க முடியாமல், வீணாக உள்ளது. அவற்றை புதுப்பிக்க வேண்டும்.விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் வகையில், கால்நடைத்துறை சார்பில், குறிச்சிக்கோட்டையில் அமைக்கப்பட்ட கோழி குஞ்சு பொரிப்பகம் செயல்படாமல் உள்ளது.அதே போல், கிராமப் புறங்களிலுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் இயக்கப்படுவதில்லை. கால்நடைகளை விவசாயிகள் பல கி.மீ., துாரம் அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, பேசினர்.