பனையை பாதுகாக்க தடுப்பு விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை: செங்குளம் கரையிலுள்ள பனைமரங்களை பாதுகாக்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை அருகே பள்ளபாளையத்தில் அமைந்துள்ள செங்குளம், ஏழு குள பாசன திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது. இக்குளம், 74.84 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குளத்தின் கரையில், வரிசையாக பனைமரங்கள் உள்ளது. கரை அரிப்பை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள், இம்மரங்களால் ஏற்படுகிறது. புதிதாக பல்வேறு இடங்களில், பனை நாற்றுகள் வளர்ந்து வருகிறது. இம்மரங்கள், கரையில் புதர்களை அகற்றும் போது வெட்டப்படுவது; குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பது போன்ற காரணங்களால், பாதிக்கப்படுகிறது. பல்வேறு நன்மைகளை தரும் பனைமரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வளர்ச்சி தருணத்தில் உள்ள மரங்களை சுற்றிலும், தடுப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.