பல ஆண்டுகளாக விவசாய மின் இணைப்புக்கு.. தவமாய் தவமிருந்து! குறை தீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
உடுமலை; விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து நீண்ட காலமாக காத்திருக்கும் விவசாயிகள், குறை தீர் கூட்டத்தில், அதிகாரிகள் முன் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:விவசாய மின் இணைப்பு கோரி, பல ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். சாதாரண வரிசை, விரைவு மின் இணைப்பு, தட்கல் முறை என, பல ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.மின் இணைப்பு வழங்க தயார் நிலை பதிவு செய்து, மின் கம்பங்கள், கம்பிகள் அமைத்து, மோட்டார் வாங்கி தயாராக உள்ள விவசாயிகளுக்கும், இரு ஆண்டாக மின் இணைப்பு வழங்கவில்லை.மைவாடி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, நான்கு கிராமங்கள், பல கோடி ரூபாய் வர்த்தகம் உள்ள நிலையில், நிரந்தரமாக செயலர் நியமிக்கப்படாமல், பாதிப்பு ஏற்படுகிறது.தெரு நாய்கள், ஆடு, மாடுகளை கடித்து வருகின்றது. கோட்டமங்கலம் கிராமத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான, 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துள்ளன.மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ள நிலையில், உடுமலை பகுதியிலும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகியுள்ளது. எனவே, வெறி நாய்களை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரையில், மீண்டும் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.உடுமலை நகராட்சியுடன், கணக்கம்பாளையம், போடிபட்டி ஆகிய ஊராட்சிகளை இணைக்க வேண்டும். அதிலும், கணக்கம்பாளையம் ஊராட்சி, உடுமலை நகராட்சியின் மேற்கு, கிழக்கு, தெற்கு எல்லையாக இருந்தும் இணைக்கப்படவில்லை.இந்த ஊராட்சிகள், மக்கள் தொகை, வீடுகள் என, நகரமாக வளர்ந்தாலும், கிராமமாக உள்ளதால், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. குப்பை அகற்றுவதற்கான துாய்மை பணியாளர்கள் இல்லாததால், பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு, ரூ.55 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தியும், குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில் நிர்வாக குளறுபடி, நீர் வினியோகத்தில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது.குடிமங்கலம் ஒன்றியம், கொள்ளுப்பாளையம், மசக்கவுண்டன்புதுார், வேலாயுத கவுண்டன் புதுார் உள்ளிட்ட பல கிராமங்களில், முறையாக அனுமதி பெறாமலும், விதி மீறியும் தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இதனால், காற்று, நீர் மாசு என சுற்றுச்சூழல் பாதித்து வருகிறது. மக்கள் கடுமையாக பாதித்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிமராமத்து திட்டத்தின் கீழ், அணை மற்றும் குளம், குட்டைகளை துார்வாரி, விவசாயிகள் மண் எடுக்கும் திட்டத்தை, நடப்பாண்டு முன்னதாகவே துவக்கும் வகையில், அரசு துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பட்டியல் தயாரித்து, பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும்.கடந்தாண்டு, தாமதம் காரணமாக முழுமையாக நீர் நிலைகள் துார்வார முடியவில்லை. எனவே, பருவ மழைக்கு முன், கோடை காலத்தில், விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பேசினர்.