வேட்டைக்கு சென்றவர்களுக்கு அபராதம்; வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை
உடுமலை : உடுமலை அருகே, வன எல்லையில், வேட்டை நாய்களுடன், வேட்டைக்கு சென்ற நான்கு பேரை வனத்துறையினர் பிடித்து, அபராதம் விதித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் கரட்டூர் வனச்சுற்று, ராவணாபுரம் பகுதியில், சிலர் வேட்டைக்கு செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, வனச்சரக அலுவலர் மணிகண்டன், கரட்டூர் பிரிவு வனவர் மாரிமுத்து மற்றும் வனத்துறை பணியாளர்கள் ரோந்து சென்றனர்.அப்போது, முயல் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வேட்டை நாய்களுடன் அதிகாலை நேரத்தில், சென்ற நான்கு நபர்களை வனத்துறையினர் பிடித்தனர்.அவர்கள், விளாமரத்துப்பட்டியைச்சேர்ந்த, சந்தோஷ், 23; உடுக்கம்பாளையத்தைச்சேர்ந்த ஹரிஷ், 22; ஸ்ரீதர் 18; சிவக்குமார், 19 ஆகியோர் என்பது தெரியவந்தது. வன எல்லையில் வேட்டையாடச்சென்றதற்காக அவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.வனத்துறையினர் கூறியதாவது: பண்டிகை காலங்களில், வேட்டையை தடுக்க, சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், தொடர்ந்து வன எல்லையில் தொடர் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, வன எல்லையை ஒட்டியுள்ள வலையபாளையம், வல்லக்குண்டாபுரம், பாண்டியன்கரடு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ரோந்துக்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வனச்சட்டங்களை மீறுபவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.