மண்வளம் மீட்க பசுந்தாள் உரச்செடி சாகுபடி தீவிரம்
பொங்கலுார் : பசுமைப் புரட்சிக்கு பின் தொடர்ந்து ஓரினப் பயிர் சாகுபடி செய்வதாலும், இயற்கை உரங்களிலிருந்து விடுபட்டு செயற்கை உரங்களுக்கு மாறியதாலும் நிலத்தில் சத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மண்ணில் கார்பன் அளவு இரண்டு சதவீதம் இருந்தால் அது மிகவும் வளமான மண் ஆகும். அதில் எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் நன்கு விளையும். தற்பொழுது அரை சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் மண் மலட்டுத்தன்மையை அடையும். மண் மலடானால் பயிர் சாகுபடி செய்ய முடியாத தரிசு நிலமாக மாறிவிடும். தற்போது, விவசாயிகளிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.இயற்கையாகவே மண்வளத்தை அதிகரிக்க விவசாயிகள் பசுந்தாள் உரச் செடிகளான சணப்பை, கொள்ளு, தட்டை போன்றவற்றை சாகுபடி செய்வதில்ஆர்வம் காட்டுகின்றனர்.மாசி பட்டத்தில் பசுந்தாள் உரச் செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இவற்றை மடக்கி உழுவதன் மூலம் நில வளம் மேம்படும். அடுத்து வரும் வைகாசி பட்ட சாகுபடிக்கு மண் தயாராகி விடும்.