கிரிவலப்பாதையில் பசுமை பற்றிப்படரும்
திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி அருகே உள்ள கைத்தமலையில், 'ஊத்துக்குளி கைத்தமலை வனம்' உருவாக்கப்பட்டது.கொரோனா தொற்றுக்கு முன்னதாக, 4,000 மரக்கன்றுகள் நட்டு, தண்ணீர் விட்டு பராமரித்து வளர்க்கப்பட்டது. இன்று, குறுங்காடு போல் பசுமையாக மாறியுள்ளது. 'துளிகள் காங்கயம்' அமைப்புடன் இணைந்து, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. கைத்தமலையின் கிரிவல பாதையில், பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையிலான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.கொங்கு மெட்ரிக் பள்ளி நிர்வாகம், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு வளர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி யில், தன்னார்வலர்கள், பசுமை ஆர்வலர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.ஆலமரம், அத்தி, மருதம், வேம்பு, புங்கன், இலுப்பை, சிரக்கொன்றை, வாகை, அரசமரம், புன்னை ஆகிய ரகங்களில், பெரிய மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, 'வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.