திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதி களில், தீவிர திருத்தப்பணிக்கு பின்(எஸ்.ஐ.ஆர்.) இறந்தவர்கள் 1 லட்சத்து 58 ஆயிரத்து 457 பேர்; இடம்பெயர்ந்தோர், 3 லட்சத்து 82 ஆயிரத்து 927 பேர்; இரட்டை பதிவு 22 ஆயிரத்து 401 என, 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக இருந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 ஆக குறைந்துள்ளது. இறந்த வாக்காளர் பலரது பெயர்கள் நீக்கப்படாமலும், இரட்டை பதிவு வாக்காளர் இரண்டு தொகுதிகளின் வரைவு பட்டியலிலும் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். பா.ஜ., இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் அய்யப்பன் கூறியதாவது: திருப்பூர் தெற்கு தொகுதி, சந்திராபுரத்தை சேர்ந்த, 80 வயதான ராமலிங்கம்; இவர் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது; மனைவியும் இறந்துவிட்டார். அவர்களது குடும்பத்தினர் யாரும் திருப்பூரில் இல்லை. ராமலிங்கத்தின் பெயர் வரைவு பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அவரது குடும்பத்தினரோ அல்லது கட்சியினரோ படிவம் பூர்த்தி செய்து கொடுக்காத நிலையில், பட்டியலில் எப்படி பெயர் சேர்க்கப்பட்டது; அவருக்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. எஸ்.ஐ.ஆர். பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்( பி.எல்.ஓ.) பலர், வாக்காளர்களுக்கு படிவம் வழங்கும் முன்னரே, படிவத்தை பதிவு செய்துவிட்டனர். தவறுதலாக இறந்தவர்களின் படிவங்களையும் கணக்கில் சேர்த்துள்ளனர். அப்படிவங்களை பி.எல்.ஓ.,க்கள் தாங்களே பூர்த்தி செய்தோ, படிவம் பூர்த்தி செய்யாமலேயே, அடிப்படை விவரங்களை அளித்து ஆன்லைனில் பதிவு செய்ததாக தெரியவருகிறது. சந்திராபுரத்தை போன்று, மற்ற பகுதிகளிலும், இறந்தவர்கள் பலரது பெயர் வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இரட்டை பதிவு வாக்காளர் சிலர், இரண்டு தொகுதி களுக்கும் படிவம் பூர்த்தி செய்து வழங்கி, வரைவு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். எஸ்.ஐ.ஆர்.க்கு பிறகு, வாக்காளர்களின் உறவினர் பெயரில் தவறு, புகைப்படம் மாறுதல் போன்ற தவறுகளும் நடந்துள்ளன. இதனால், எஸ்.ஐ.ஆர்.ன் நோக்கமே அடிபட்டு போகிறது. மேல்முறையீடு வரவில்லையே!: வரைவு பட்டியலில் இறந்த வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அரசியல் கட்சியினர் சிலர் பொத்தாம் பொதுவாக கூறுகின்றனர். இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளோர்பட்டியலில் இடம்பெற்றிருப்பின், பெயர், பாகம் விவரங்களோடு, வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம். வரைவு பட்டியல் வெளியிட்டு ஒன்பது நாட்களாகிறது; இதுவரை, கட்சியினர் யாரும், எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. சமீபத்தில் தேர்தல் பார்வையாளர் வந்தபோதுகூட, அதற்கான படிவங்கள் கட்சியினருக்கு வழங்கப்பட்டது; குளறுபடிகள் இருப்பின், அப்போதே பூர்த்தி செய்து கொடுத்திருக்கலாம்; அப்போதும், எந்த கட்சியினரும், குளறுபடிகள் தொடர்பாக எந்த விவரமும் அளிக்கவில்லை. இறந்த, இரட்டை பதிவு வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பின், ஆவணங்கள் சரி பார்ப்பில், கண்டறிந்து நீக்கப்படுவர்; நிச்சயம், செம்மையான இறுதி பட்டியல் வெளியாகும், என்றனர். - தேர்தல் பிரிவினர்: மீண்டும் கள ஆய்வு அவசியம்: வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.), அந்தந்த பி.எல்.ஏ.க்களுடன் இணைந்து, வரைவு பட்டியலில் இறந்த வாக்காளர் உள்ளனரா என கண்டறிந்து, நீக்கவேண்டும். மீண்டும் களப்பணி மேற்கொண்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். பி.எல்.ஓ.க்கள், வாக்காளர் விவரங்களை பிழையாக பதிவு செய்துவிடுகின்றனர். வாக்காளர் அட்டையில், பிழைகள், முரண்பாடுகள் தொடர்கின்றன. இறுதி பட்டியலில் பிழைகள் ஏற்பட்டால், தேர்தலுக்குப்பின், அடுத்த திருத்தத்தின்போதுதான் சரி செய்யமுடியும். தன்னார்வலர்களை நியமித்து, பெயர் சேர்த்தல், திருத்தத்துக்கான படிவங்களை, வாக்காளர் முன்னிலையில், உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். - அய்யப்பன்: மாநில செயற்குழு உறுப்பினர்: