நான் தீவிரவாதி; தெரியும்ல... முந்திரி வியாபாரிக்கு மிரட்டல்
பல்லடம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் கனகராஜ், 38; முந்திரி வியாபாரி. இவரிடம், 2024 பிப்., 22ல், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையை சேர்ந்த ஜெமிஷா, 35, போனில் தொடர்பு கொண்டு, ஒன்றரை டன் முந்திரி பருப்பு வாங்கினார்.அதற்கான, 9 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்த ஜெமிஷா, மாயமானார். கனகராஜ் புகாரில், பல்லடம் போலீசார் 2024 ஆக., 2ம் தேதி ஜெமிஷாவை கைது செய்தனர். கோர்ட் அவரை நிபந்தனை ஜாமினில் விடுவித்தது. ஓரிரு நாட்கள் பல்லடம் ஸ்டேஷனில் கையெழுத்திட்ட ஜெமிஷா, மீண்டும் மாயமானார். பாதிக்கப்பட்ட கனகராஜுடன் வந்த வியாபாரிகள், பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷிடம் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தனர்.வியாபாரிகள் கூறியதாவது:ஜெமிஷாவின் மொபைல் எண்ணுக்கு கனகராஜ் தொடர்பு கொண்டபோது, 'நாங்கள் கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆட்கள்; உன்னையும் கொன்று விடுவோம்' என, ஜெமிஷா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவர்கள், தமிழகம் முழுதும் பல்வேறு வியாபாரிகளிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கொலை மிரட்டலுக்கு பயந்து யாரும் புகார் அளிக்க வரவில்லை. கனகராஜூக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்' என்றனர்.