கடைமடை விவசாயிகளுக்கு பாதிப்பு; பி.ஏ.பி.,-ல் தண்ணீர் திருட்டு குறித்து எச்சரிக்கை
பல்லடம் : ''பி.ஏ.பி.,யில் நீர் திருட்டு தொடருமானால், கடைமடை விவசாயி களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்,'' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.அதன் மாநில ஊடக பிரிவு செயலாளர் ஈஸ் வரன் அறிக்கை:பி.ஏ.பி.,யில் தண்ணீர் திருட்டு என்பது யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சபை தலைவர்கள், ஷட்டர் நீக்குபவர் உள்ளிட்டவர்களுக்கு தெரியாமல் பி.ஏ.பி.,யில் தண்ணீர் திருட்டு நடக்க சாத்தியம் குறைவு.அவரவர் மடைக்கு தண்ணீர் திறந்து விடப்படும் போது, முறையாக அதை கையாண்டு பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டியது விவசாயிகளின் பொறுப்பு. பி.ஏ.பி.,யை பராமரித்து, பேணிக்காக்க வேண்டியது ஒவ்வொரு பாசன சபை தலைவர்களின் கடமையாகும். தண்ணீர் திருட்டு நடப்பதை தடுக்க முடியவில்லை எனில், எதற்கு பாசன சபை தலைவர் வேண்டும்? மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. உள்ளூர் பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு சாதகமாக சில பாசன சபை தலைவர்கள் செயல்படுகின்றனர்.பாசன சபை என்பது அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. எனவே, ஒரு குறிப்பிட்ட பாசன சபைக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் திருட்டு நடப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு பாசன சபை தலைவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளே முழு பொறுப்பேற்று, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பி.ஏ.பி., நீரை நம்பியுள்ள கடைமடை விவசாயிகள் கடும்பாதிப்பு அடைவார்கள்.இவ்வாறு அவர் கூறினர்.