உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அட்வான்ஸ் லைசென்ஸ் இருந்தால் பின்னல் துணி இறக்குமதிக்கு வரி விலக்கு

அட்வான்ஸ் லைசென்ஸ் இருந்தால் பின்னல் துணி இறக்குமதிக்கு வரி விலக்கு

திருப்பூர்: 'அட்வான்ஸ் லைசென்ஸ்' வைத்துள்ள ஏற்றுமதியாளருக்கு, செயற்கை நுாலிழை பின்னல் துணி இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து, செயற்கை நுாலிழை பின்னல் துணிகள் இறக்குமதி செய்ய, மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுப்பாடு விதித்தது.அதன்படி, ஒரு கிலோ 3.50 டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள (300 ரூபாய்) துணிகளை இறக்குமதி செய்ய மட்டும், வரிவிலக்கு அளிக்கப்படும்; குறைந்த மதிப்புள்ள துணிக்கு, வரி செலுத்த வேண்டுமென அறிவித்தது.இதன்மூலமாக, குறைந்த விலை பின்னல் துணி இறக்குமதி குறைந்தது. இருப்பினும், செயற்கை நுாலிழை துணியில் ஆயத்த ஆடை தயாரித்தவர்கள், சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வகையில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள செயற்கை நுாலிழை பின்னலாடை ஏற்றுமதி தேக்கமடைந்தது.ஏற்றுமதியாளர் கோரிக்கையை ஏற்று, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) வாயிலாக, வெளிநாட்டு வர்த்தக பிரிவு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அரசும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.'அட்வான்ஸ் லைசன்ஸ்' எனப்படும் உரிமம் பெற்றவர்கள், பின்னல் துணியை இறக்குமதி செய்து, அவற்றை ஆடையாக மாற்றி ஏற்றுமதி செய்தால், குறைந்தபட்ச இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''குறைந்தபட்ச வரி விலக்கு தொடர்பாக, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்தனர். எங்களது கோரிக்கையை ஏற்று, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரக தலைவர் சந்தோஷ்குமார் சாரங்கி, புதிய சலுகை வழங்கியுள்ளார்.அதன்படி, செயற்கை நுாலிழை துணிகளை இறக்குமதி செய்து, அவற்றை ஆயத்த ஆடையாக மாற்றி, மறு ஏற்றுமதி செய்தால் வரிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 'அட்வான்ஸ் லைசென்ஸ்' வைத்துள்ளவர்களுக்கு மட்டும், இந்த அறிவிப்பு பொருந்தும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி