உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முக்கிய ரயில்கள் நிற்கணும்... கூடுதல் ரயில்கள் இயக்கணும்

முக்கிய ரயில்கள் நிற்கணும்... கூடுதல் ரயில்கள் இயக்கணும்

திருப்பூர்: ''வடமாநில தொழிலாளர் பயன்பெறும் வகையில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்; முக்கிய ரயில்கள், திருப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார். திருப்பூரில் நேற்று அவர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கிய கடிதம்: திருப்பூரில் அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தை செயல்படுத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது, பயணிகள் வசதி மற்றும் நிலைய உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்துகிறது. திருப்பூரில், ஒடிசா, பீஹார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் போன்ற இந்தியா முழுவதும் 19 மாநிலங்களை சேர்ந்த, 2.5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர் உள்ளனர். திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி போன்ற பிற மாவட்டத்தை சேர்ந்த, ஒரு லட்சம் தொழிலாளர் உள்ளனர்.

2 நிமிடம் நிற்க வேண்டும்

தொழிலாளர் பயணத்தை எளிதாக்கும் வகையில், திருப்பூரில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும். தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும். முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள், திருப்பூரில் இரண்டு நிமிடம் நின்று செல்ல வேண்டும். வடமாநிலம் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குச் செல்ல பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.

தங்குமிட வசதி தேவை

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக கட்டப்பட்ட பிரதான முனையத்தில் முதல் தளத்தில் 'ஏசி' ஓய்வு அறைகள் மற்றும் தங்குமிட வசதியை வழங்க வேண்டும். ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணிகள் மற்றும் வணிகர்களின் நலனுக்காக, ராஜ்கோட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை, வாரம் இருமுறை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயிலாக நீட்டிக்க வேண்டும். தற்போது வாரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும், 16617 மற்றும் 16618 ரயில்களை, தினசரி ரயில்களாக மாற்ற வேண்டும். இன்டர்சிட்டி ரயில் (எண்: 22609) ஈரோடு மற்றும் சேலம் வரை நீட்டிக்க வேண்டும். திருப்பூர் தொழிலாளர், வர்த்தக நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்பெறுவர்; வடமாநில தொழிலாளர்களும் பயன்பெறுவர். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

மதுரை, துாத்துக்குடிக்கு பகல் நேர ரயில் தேவை

கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக மதுரை, துாத்துக்குடிக்கு புதிய பகல் நேர இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும். திருப்பூர் ஸ்டேஷனில், கூடுதல் வசதி செய்து கொடுக்க வேண்டும். சேலம் மற்றும் கோவை இடையே, ஒரு மணி நேர இடைவெளியில், 'மெமு' ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் பயணிகள் பலர் பயனடைவர். - சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை