இனாம் நிலம் குத்தகை ஏலம்: தடுத்து நிறுத்திய விவசாயிகள்
திருப்பூர்: திருப்பூர் அருகே, கோவில் நிலம் என்று விவசாயிகள் பயன்பாட்டில் உள்ள நிலங்களை கோவில் நிர்வாகம் ஏலம் விட நடவடிக்கை எடுத்தது. தகவல் அறிந்து திரண்ட விவசாயிகள் எதிர்ப்பால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் வி.ஏ.ஓ. அலுவலகத்தில், கண்டீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 11 பகுதிகளில் உள்ள புன்செய் நிலங்களில் சாகுபடி செய்யும் உரிமத்துக்கான ஏலம், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் அலுவலகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகவல் பரவிய நிலையில் அதனை அகற்றி விட்டனர். இந்நிலையில், அறிவிப்பில் குறிப்பிட்ட நிலத்தில் தங்கள் அனுபவத்தில் வைத்துள்ள விவசாயிகள் இதுகுறித்து பல்வேறு விவசாய சங்கங்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நேற்று காலை ஏலம் நடக்கவிருந்த அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நில உரிமை விவசாயிகளும், சுற்றுப்பகுதி விவசாயிகள், பல்வேறு அமைப்பினரும் திரண்டனர்.கோவில் தக்கார் அன்புதேவி, ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில், ஏலம் துவங்கியது. 'எங்கள் நிலத்தில் எங்களுக்கு தெரியாமல் எந்தவிதமான உரிய அறிவிப்பும் இல்லாமல் ஏலம் விடக்கூடாது,' என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, ஏலத்தை ரத்து செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர். விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது: அறநிலையத்துறை கோவில் நிலம் என்று சொல்லும் விவசாய நிலங்களுக்கு அதனை அனுபவத்தில் வைத்துள்ள விவசாயிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளன. அனை மறைத்தும், விவசாயிகளிடம் நிலத்தை பறிக்கும் எண்ணத்திலும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இப்பிரச்னை குறித்து மாநில அளவில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.